கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு கொரோனா


கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு கொரோனா
x

2 ‘டோஸ்’ தடுப்பூசி போட்ட பிறகும், கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு 3-வது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெறுகிறார்.

பெங்களூரு:

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை

கர்நாடக முதல்-மந்திரியாக இருப்பவர் பசவராஜ் பொம்மை (வயது 62). இவர் அரசு பணிகளிலும், பா.ஜனதா நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். கடந்த 4-ந்தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பெங்களூரு வந்த போது அவரை சந்தித்து பேசியிருந்தார். மலும் மழை பாதித்த மாவட்டங்களில் ஆய்வு செய்தார்.

இந்த நிலையில் கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று டெல்லி செல்ல திட்டமிட்டு இருந்தார். அங்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள இருந்தார். மேலும் கட்சியின் மேலிட தலைவர்களை நேரில் சந்தித்து மந்திரிசபை விரிவாக்கம், சட்டசபை தேர்தலுக்கு தயாராவது குறித்தும் ஆலோசிக்க அவர் திட்டமிட்டு இருந்தார்.

கொரோனா பாதிப்பு

இந்த நிலையில் நேற்று அவரது உடல்நிலையில் லேசான சோர்வு காணப்பட்டது. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லேசான பாதிப்பு இருப்பதால் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். கடந்த சில நாட்களில் என்னை சந்தித்தவர்கள் தனிமைப்படுத்தி கொண்டு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நான் இன்று (அதாவது நேற்று) டெல்லிக்கு மேற்கொள்ள இருந்த பயணத்தை ரத்து செய்துள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

2 'டோஸ்' தடுப்பூசி

பசவராஜ் பொம்மை கொரோனா முதல் அலையின்போது வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு கடந்த 3-வது அலையிலும் அவருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.

அப்போதும் அவருக்கு பாதிப்பு தீவிரமாக இருக்கவில்லை. வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு இருந்தார். இந்த நிலையில் அவருக்கு 3-வது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை 2 'டோஸ்' கொரோனா தடுப்பூசியும் போட்டுள்ளார். இருப்பினும் அவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குணமடைய வாழ்த்து

இதுபற்றி தகவல் அறிந்ததும் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தொலைபேசியில் பசவராஜ் பொம்மையிடம் பேசி உடல்நிலை குறித்து விசாரித்தார். மேலும் விரைவாக குணம் அடையுமாறு அவர் கூறி வாழ்த்து தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து பல்வேறு துறைகளின் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பசவராஜ் பொம்மை விரைவில் குணம் அடைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

பயப்பட தேவை இல்லை

கர்நாடகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்பு தலைநகர் பெங்களூருவில் ஏற்பட்டு வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வந்தாலும் நோயின் தீவிரத்தன்மை என்பது குறைவாகவே இருப்பதாக டாக்டர்கள் கூறுகிறார்கள்.

கொரோனா பாதித்து சிகிச்ைசக்காக ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் மிக குறைவாக இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். அதனால் பொதுமக்கள் பயப்பட தேவை இல்லை என்றும், அதே நேரத்தில் மிகுந்த முன்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர்.


Next Story