கள்ளக்காதலியின் கணவர் கத்தியால் குத்திக் கொலை
ஒலேநரசிப்புரா அருகே கள்ளக்காதலியின் கணவரை கத்தியால் குத்திக் கொலை செய்த தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஹாசன்-
கள்ளக்காதல் விவகாரம்
ஹாசன் மாவட்டம் ஒலேநரசிபுரா தாலுகா கேத்தனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் ஜவரய்யா (வயது 45). விவசாயி. இவரது மனைவி மஞ்சுளா. அதே பகுதியில் ஜவரய்யாவிற்கு சொந்தமான பழைய வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டை புனரமைக்கும் பணியில் மாச்சோகவுடஹள்ளியை சேர்ந்த சாமி என்பவர் ஈடுபட்டு வந்தார்.
அப்போது சாமிக்கும், ஜவரய்யாவின் மனைவி மஞ்சுளாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக தெரிகிறது. இந்த விவகாரம், ஜவரய்யாவுக்கு தெரியவந்தது. இதனால், அவர் தனது மனைவி மற்றும் சாமியை கண்டித்துள்ளார். இதன்காரணமாக சாமியுடன் பழகுவதை மஞ்சுளா நிறுத்தி கொண்டார். இதனால் கோபம் அடைந்த சாமி, மஞ்சுளா மற்றும் அவரது கணவர் ஜவரய்யாவுடன் தகராறு செய்தார்.
கத்தியால் குத்தி கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜவரய்யாவின் வீட்டுக்கு வந்து சாமி தகராறு செய்துள்ளார். அப்போது ஜவரய்யாவுக்கும், சாமிக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. அந்த சமயத்தில் சாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜவரய்யாவை சரமாரியாக குத்தினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மஞ்சுளா, சாமியை தடுக்க முயன்றார். அப்போது அவரையும் சாமி கத்தியால் குத்தினார்.
இதில் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தனர். இதையடுத்து சாமி அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இந்த சம்பவத்தில் ஜவரய்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மஞ்சுளா பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினார்.
போலீஸ் வலைவீச்சு
இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் மஞ்சுளாவை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜவரய்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபபதிவு செய்து சாமியை வலைவீசி தேடி வருகிறார்கள்.