காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு; அரசு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரிய மனு ஐகோர்ட்டில் விசாரணை!
மத்திய அரசிடம் ரூ.15 லட்சம் இழப்பீடு கோரிய மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி,
காற்று மாசுபாடு காரணமாக கடும் உடல் பாதிப்பு ஏற்படுவதாக குறிப்பிட்டு, மத்திய மற்றும் டெல்லி அரசாங்கத்திடம் ரூ.15 லட்சம் இழப்பீடு மற்றும் ரூ.25 லட்சம் சுகாதார காப்பீடு கோரி
டெல்லி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மனுதாரர் தரப்பில் கூறுகையில், காற்று மாசுபாடு நுரையீரலை பாதிக்கிறது மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களை ஏற்படுத்தும்.மாசு என்பது ஒரு நபரின் வாழ்க்கையை ஐந்து முதல் ஒன்பது ஆண்டுகள் வரை குறைக்கும் ஒரு மெதுவான விஷமாகும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஒரு கல்லூரி மாணவர் தாக்கல் செய்த இந்த மனுவை விசாரித்த நீதிபதி யஷ்வந்த் வர்மா கூறிய தீர்ப்பில், கோர்ட்டு என்பது ஒரு முக்கியமான இடம். கோர்ட்டில் மனு தாக்கல் செய்வதும் அல்லது மனுத்தாக்கல் செய்வதற்கான உரிமை என்பதும் உங்கள் சுயவிவர விண்ணப்பத்துக்கான ஒரு அல்ல. அடுத்த முறை நீங்கள் ஒரு முக்கியமான பிரச்சினையை கோர்ட்டில் கொண்டுவர மிகவும் வரவேற்கப்படுகிறீர்கள்.
மாசுபாடு மற்றும் அதன் பக்க விளைவுகள் பற்றிய பொதுவான விவாதத்தை நான் கோர்ட்டில் விவாதிக்க விரும்பவில்லை. மாசு காரணமாக உங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்ட பிறகு ஏதேனும் மருத்துவ அறிக்கை?, மருத்துவ சான்றுகள், உங்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரின் பரிசோதனை முடிவுகள், உங்கள் தனிப்பட்ட பாதிப்பிற்கு ஆதாரமாக கோர்ட்டில் காட்ட வேண்டும்.
மனுதாரர் தரப்பில் கூறுகையில், தனக்கு மூச்சுத் திணறல் இருப்பதாக கூறினார். மாசுபாடு காரணமாக தனிப்பட்ட பாதிப்பு, 70 -75 வயதான காலத்தில் மட்டுமே தெரியவரும். ஆனால், மாசுபாடு பல்வேறு நோய்களுக்கு மூல காரணம் என்றார்.
மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவின் எல்லையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே விரிவுபடுத்தியுள்ளது. அதன்படி, "மாசு இல்லாத சுத்தமான சுற்றுச்சூழலுக்கான உரிமையை" அடிப்படை உரிமையாகக் கொண்டுள்ளது என்பதையும் குறிப்பிட்டார்.
மனுதாரர் சிவம் பாண்டேவுக்கு தனிப்பட்ட பாதிப்பு எதுவும் இல்லை, மருத்துவ ஆதாரமும் இல்லை என்று கூறி இந்த மனுவை நீதிபதி யஷ்வந்த் வர்மா தள்ளுபடி செய்தார்.