சயனைடு மண்ணை விற்க மத்திய அரசு முடிவு; தொழிலாளர்கள் எதிர்ப்பு


கோலார் தங்கவயலில் உள்ள சயனைடு மண்ணை மத்திய அரசு விற்க முடிவு செய்துள்ளது. அதற்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கோலார் தங்கவயல்:

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயலில் உலக பிரசித்தி பெற்ற கோலார் தங்கச்சுரங்கம் செயல்பட்டு வந்தது.

மத்திய அரசு மூடியது

சுரங்கத்திற்குள் உள்ள தங்கத்தை வெட்டி எடுக்க அதிக செலவு ஆவதாக கூறி மத்திய அரசு தங்கச் சுரங்கத்தை மூடியது. அந்த நிறுவனத்தில் பல தொழிலாளிகள் பணியில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில் 3,600 தொழிலாளிகள் இறுதியாக பணியாற்றி வந்தனர். தங்கச் சுரங்கம் மூடப்படுவதால், இறுதியாக பணியில் இருந்த 3,600 தொழிலாளிளுக்கு கட்டாய பணி ஓய்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

ஆனால் 3,600 தொழிலாளிகளுக்கு கொடுக்கவேண்டிய இழப்பீட்டு தொகையில் 50 சதவீதம் அதாவது ரூ.52 கோடி நிதியை மட்டும் விடுவித்தது. மீதமுள்ள ரூ.52 கோடியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. தொழிலாளிகளுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையை வழங்காமல் மத்திய அரசு தங்கச்சுரங்கத்தை அதிரடியாக மூடியது.

சயனைடு மண்

தங்கச் சுரங்கம் மூடி 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆகியும் சுரங்க தொழிலாளிகளுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகை ரூ.52 கோடியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. இந்த நிலையில் தங்கச் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட பாறைகளை அறைத்து அதிலிருந்து தங்கத்தை எடுத்த பின் சயனைடு மண்மலை போல் கோலார் தங்கவயலில் பல இடங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த சயனைடு மண் மலையை தனியாருக்கு விற்பனை செய்ய டெண்டர் விடுவதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அதில் உண்மை இல்லை என்று மத்திய கனிம வள மந்திரி பிரகலாத் ஜோஷி உறுதி அளித்தார்.

தொழிலாளர்கள் கருத்து

சயனைடு மண் மலையை தனியாருக்கு விற்பனை செய்வது குறித்த தகவல் தொழிலாளிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு சுரங்க தொழிலாளிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் தொழிலாளிகளுக்கு வழங்கவேண்டிய 50 சதவீத நிலுவைத்தொகையான ரூ.52 ஆயிரம் கோடியை வட்டியுடன் வழங்கிய பின்னர் தான் சயனைடு மண் மலையை விற்பனை செய்யவேண்டும் என்று சுரங்க தொழிலாளிகள் கருத்துக்களை கூறினர்.

இதுபற்றி தங்கச்சுரங்கத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளி செல்வகுமார் கூறுகையில், 'கோலார் தங்கச்சுரங்க தங்கத்தை பிரித்தெடுக்கும் தொழிற்சாலையில் பணியாற்றினேன். நாட்டிற்கு 25 ஆயிரம் டன் தங்கத்தை உற்பத்தி செய்து கொடுத்த தொழிலாளிகளை மத்திய அரசு ஏமாற்றி வருகிறது. கடந்த 2001-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதியுடன் தங்கச் சுரங்கத்தை மத்திய அரசு மூடியது. அப்போதைய மத்திய அரசு 3,600 தொழிலாளிகளுக்கு சொற்ப தொகையை மட்டும் கொடுத்துவிட்டு வீட்டிற்கு அனுப்பியது. மத்திய அரசு தொழிலாளிகளுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை வழங்காததால் 80 சதவீத தொழிலாளிகள் பசி, பட்டினியுடன் இறந்து போனார்கள். மத்திய அரசு தொழிலாளிகளுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகை வழங்கப்பட்ட பின் சுரங்கத்திற்கு சொந்தமான சொத்துக்ளை எப்படியாவது விற்றுக்கொள்ளட்டும்' என்றார்.

உயிரை கொடுத்தாவது...

தங்கச்சுரங்க தொழிற்சாலை போர்மென் சுந்தரராஜன் கூறுகையில், 'கோலார் தங்கச்சுரங்கத்தில் பணியாற்றி கட்டாய ஓய்வு பெற்ற 3,600 தொழிலாளிகளுக்கு நிலுவைத் தொகை ரூ.52 கோடியை கொடுக்காமல் மத்திய அரசு வஞ்சித்து வருவது கண்டனத்திற்கு உரியது.

தொழிலாளிகளுக்கு கொடுக்கவேண்டிய நிலுவைத் தொகையை கொடுக்காமல் சயனைடு மண் மலையையோ அல்லது சொத்துக்களையோ விற்பனை செய்ய முற்பட்டால் உயிரை கொடுத்தாவது அதை தடுத்து நிறுத்துவோம்' என்றார்.

வேதனை

தொழிலாளி ஆரோக்கிய தாஸ் கூறுகையில், 'தங்கச் சுரங்கத்தை மூடியதால் அந்த அதிர்ச்சியில் எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனது மனைவியை வைத்துக்கொண்டு வருவாய், உணவு இன்றி அவதிப்படுகிறேன். நாள்தோறும் ஒரு வேலை உணவு சாப்பிட்டு தான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இத்தகைய வறுமையில் இருக்கும் போது எங்களுக்கு கொடுக்கவேண்டிய 50 சதவீத தொகையான ரூ.52 கோடியை கொடுத்து விட்டு மத்திய அரசு சயனைடு மண் மலையை விற்கட்டும்.

நிலுவைத் தொகையை வழங்காமல் சயனைடு மண் மலையை மத்திய அரசு விற்பனை செய்ய முன்வந்தால் அரசுக்கு எதிராக குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளவும் தயங்கமாட்டோம்' என்றார்.

ஆவேசம்

தொழிலாளி புருஷோத்தமன் கூறுகையில்,'21 ஆண்டுகளுக்கு முன் தங்கச் சுரங்கம் மூடப்பட்டது. நஷ்டம் என்ற காரணத்தை கூறி தேவையின்றி அப்போதைய மத்திய அரசு தங்கச் சுரங்கத்தை மூடியது வேடிக்கையாக உள்ளது. 21 ஆண்டுகளாக தொழிலாளிகளுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகை ரூ.52 கோடியை இன்னும் வழங்காதது வேடிக்கையாக உள்ளது. சொந்த நாட்டில் வறுமையில் உள்ள தங்கச்சுரங்க தொழிலாளிகளின் நிலையை மத்திய அரசு கண்டுகொள்ளாதது கண்டிக்கத்தக்கது.

முதலில், மத்திய அரசு எங்களுக்கு கொடுக்கவேண்டிய நிலுவைத் தொகையை கொடுக்கட்டும். அதன் பின்னர் சயனைடு மண் மலை மட்டும் அல்ல வேறு எதையாவது விற்பனை செய்து கொள்ளட்டும்' என்றார்.

தொழிலாளி அந்தோணி தாஸ் கூறுகையில், 'தங்கச்சுரங்கத்தை மூடியபின், பிழைக்க வேறு வழியில்லாமல் உணவுக்காக மிகவும் கஷ்டப்பட்டோம். மனைவி பிள்ளைகளை காப்பாற்ற வயது முதிர்ச்சியிலும் கட்டிட தொழில் செய்தேன். ஆனால், தொழிலாளிகளுக்கு கொடுக்கவேண்டிய நிலுவைத் தொகை ரூ.52 கோடியை மத்திய அரசு விடுவிக்காதது எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. சுரங்கம் மூடி 22 ஆண்டுகளாகியும் தொழிலாளிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகை கிடைக்காதது கொடுமையிலும் கொடுமை. எங்கள் கஷ்டங்களை கேட்க யாரும் இல்லை. தங்கச்சுரங்க தொழிலாளிகளுக்கு கிடைக்கவேண்டிய நிலுவைத் தொகை குறித்து மக்கள் பிரதிநிதிகள் யாரும் குரல் கொடுக்காதது வேதனை அளிக்கிறது. எங்களுக்கு கிடைக்கவேண்டிய நிலுவைத் தொகையை கொடுத்த பின்னர் தான் தங்கச்சுரங்கத்திற்கு சொந்தமான சயனைடு மண் மலை உள்ளிட்டவற்றை மத்திய அரசு விற்பனை செய்யவேண்டும்' என்றார்.

விற்பனை செய்யலாம்

தங்கம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை போர்மென் தாஸ் சின்னசவரி கூறுகையில், 'தங்கம், சி-லைட் உள்ளிட்ட பல்வேறு உலோகப்பொருட்கள் சயனைடு மண்ணில் உள்ளது. சயனைடு மண் மலையை விற்பனை செய்தால் அரசுக்கு ரூ.25 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும். அதன் மூலம் அரசுக்கு லாபம் கிடைப்பதுடன் தொழிலாளிகளுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகை ரூ.52 கோடியை மத்திய அரசு சுலபமாக வழங்க முடியும். தங்கவயலை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே சயனைடு மண் மலையை மத்திய அரசு தாராளமாக விற்பனை செய்யலாம்' என்றார்.


Next Story