தலித் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதுடன் சாதி பெயரை கூறி திட்டியதால் தலித் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கோலார் தங்கவயல்:-
தாக்குதல்
கோலார் தாலுகா நங்கலி அருகே பேவஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் உதய்கிரண் (வயது 25). தலித் சமூகத்தை சேர்ந்த இவர் நேற்று முன்தினம் நங்கலி சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் பெத்தன்டஹள்ளி பகுதியில் வந்தபோது, எதிேர வந்த கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
அப்போது காரில் இருந்த மற்றொரு சமூகத்தை சேர்ந்த ராஜூ, சிவராஜ், கோபாலகிருஷ்ணா, முனிவெங்கடப்பா ஆகியோர் உதய்கிரணை பிடித்து கம்பத்தில் கட்டிவைத்து சரமாரியாக தாக்கி உள்ளனர். மேலும் சாதி பெயரை கூறி தாகத வார்த்தைகளால் அவரை தட்டியதாகவும் தெரிகிறது. பின்னர் அவரை விடுவித்தனர்.
தற்கொலை
இதனால் உதய் கிரண் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். நேற்று காலை உதய்கிரண் தூக்கில் பிணமாக கிடப்பதை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் நங்கலி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பின்னா் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மோட்டார் சைக்கிள் காரில் மோதியதால் உதய்கிரணை கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதுடன், சாதி பெயரை கூறி திட்டியதால் மனமுடைந்து அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.