டேட்டிங் ஆப்பால் வந்த வினை; இளைஞருக்கு மயக்க மருந்து கொடுத்து... இளம்பெண்ணின் அதிர்ச்சி செயல்


டேட்டிங் ஆப்பால் வந்த வினை; இளைஞருக்கு மயக்க மருந்து கொடுத்து... இளம்பெண்ணின் அதிர்ச்சி செயல்
x

டேட்டிங் ஆப் வழியே தொடர்பு கொண்ட இளம்பெண் செய்த செயலால் இளைஞர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

குருகிராம்,

அரியானாவின் குருகிராம் பகுதியை சேர்ந்தவர் ரோகித் குப்தா. ஆன்லைனில் டேட்டிங் ஆப் (செயலி) ஒன்றின் வழியே சாட்டிங்கில் ஈடுபட்டபோது இளம்பெண்ணுடன் தொடர்பு கொண்டுள்ளார். அதில், சாக்சி என்ற பெயர் கொண்ட இளம்பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு, பல நாட்களாக சாட்டிங் நீடித்து உள்ளது.

சாக்சி, தன்னுடைய சொந்த ஊர் டெல்லி என்றும், குருகிராமில் உறவினர் வீட்டில் வசித்து வருகிறேன் என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில், கடந்த 1ந்தேதி இரவு 10 மணியளவில் ரோகித்திடம் தொடர்பு கொண்டு பேசிய சாக்சி, நேரில் சந்திக்க வேண்டும் என்றும், தன்னை அழைத்து செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதன்படி, சாக்சியை பைக்கில் அழைத்து கொண்டு செல்லும் வழியில், ரோகித் அருகேயுள்ள கடையில் மதுபானம் வாங்கியுள்ளார். பின்பு இருவரும் ரோகித்தின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

தொடர்ந்து, மதுபானத்தில் கலக்க பனிக்கட்டி (ஐஸ்) வேண்டும். அதனை எடுத்து வா என சாக்சி கூறியுள்ளார். இதனால், ரோகித் சமையலறைக்கு சென்று உள்ளார். அவர் சென்றபோது சாக்சி, மதுபானத்தில் மயக்க மருந்து கலந்து வைத்து விட்டார்.

இதுதெரியாமல் ரோகித் திரும்பி வந்து மதுபானம் குடித்துள்ளார். பின்னர் மயங்கி போயுள்ளார். அடுத்த நாள் காலையில் ரோகித் மயக்கம் தெளிந்து எழுந்திருக்கிறார்.

அப்போது அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருடன் நேற்று இரவில் இருந்த சாக்சியை காணவில்லை. ரோகித்தின் தங்க சங்கிலி, ஐபோன் 14 புரோ, ரூ.10 ஆயிரம் , கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளும் காணாமல் போயிருந்தன.

அந்த கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் உதவியுடன் ரூ.1.78 லட்சம் பணமும் எடுக்கப்பட்டு உள்ளது என போலீசில் ரோகித் புகார் அளித்துள்ளார். இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story