உயிர் பிழைத்து விடுவான் என்று கருதி இறந்த சிறுவனை 8 மணி நேரம் உப்பு குவியலில் வைத்த கொடூரம்
உயிர் பிழைத்து விடுவான் என்று கருதி இறந்த சிறுவனை 8 மணி நேரம் உப்பு குவியலில் வைத்த கொடூரம் நடந்துள்ளது.
பல்லாரி:நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் நாட்டின் ஒரு சில பகுதிகளில் இன்னும் மூடநம்பிக்கை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கர்நாடகத்திலும் தற்போது ஒரு மூடநம்பிக்கை சம்பவம் அரங்கேறி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
பல்லாரி மாவட்டம் சிரவாரா கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி கங்கம்மா. இந்த தம்பதியின் மகன் பாஸ்கர் (வயது 12). இந்த நிலையில் நேற்று காலை வீட்டின் முன்பு நின்று விளையாடி கொண்டு இருந்த பாஸ்கர், எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் தண்ணீர் தேங்கி இருந்த குழியில் விழுந்து விட்டான். இதனால் அவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான். இந்த நிலையில் பாஸ்கர் தண்ணீர் தேங்கிய குழியில் பிணமாக மிதப்பதை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். அப்போது முகநூலில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் மீது உப்பு குவியலை கொட்டினால் 2 மணி நேரத்தில் உயிர் பிழைத்து விடுவார்கள் என்று ஒரு பதிவை படித்தது சேகருக்கு நினைவுக்கு வந்தது. இதனால் அவர் பாஸ்கர் உடல் மீது உப்பு குவியலை போட்டார். ஆனால் 8 மணி நேரம் ஆகியும் பாஸ்கர் உயிர் பிழைக்கவில்லை. இதன்பின்னர் பாஸ்கரின் உடல் உப்பு குவியலில் இருந்து எடுக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. பாஸ்கர் உடல் மீது உப்பு குவியல் கொட்டி வைத்திருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.