டெல்லியில் 25-வயது இளைஞர் குத்திக்கொலை - போலீசார் விசாரணை
புதுடெல்லியில் 25 வயது இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் துரத்திச் சென்று கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை,
புதுடெல்லியில் உள்ள மாளவியா நகர் பகுதியில் 25 வயது இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் துரத்திச் சென்று கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷாபூர் ஜாட் பகுதியைச் சேர்ந்த மயங்க் பன்வார் (வயது 25) என்பவர் நேற்று முன்தினம் மாளவியா நகர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத சில நபர்கள் அவருடன் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து கற்களை வீசினர். இதையடுத்து அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய அவரை துரத்திச் சென்று கத்தியால் குத்தியுள்ளனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மயங்க் அங்கு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மயங்க் பன்வாரின் நண்பர் கூறும்போது, அடையாளம் தெரியாத நான்கைந்து நபர்கள் திடீரென எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கற்களை வீசினர். இதையடுத்து நாங்கள் அந்த இடத்தை விட்டு தப்பி ஓட முயன்ற போது, அவர்கள் மயங்க் பன்வாரை துரத்திச் சென்று பலமுறை கத்தியால் குத்தினர் என்று கூறினார்.
இதுகுறித்து ஐபிசி 302, 34 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.