நில மோசடி வழக்கு: லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி கோர்ட்டு உத்தரவு

நில மோசடி வழக்கு விசாரணையை வரும் 25ம் தேதி ஒத்திவைத்து நீதிபதி விஷால் கோக்னே உத்தரவிட்டுள்ளார்.
Former Bihar CM Lalu Prasad Yadav, Tejashwi Yadav, Tej Pratap Yadav, Misa Bharti arrive to appear at the Rouse Avenue Court in connection with the job for land money laundering case, in New Delhi
Published on

புதுடெல்லி,

உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி, ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ். இவர் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது ரெயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் 'குரூப் டி' பணிகளில் பலர் நியமிக்கப்பட்டனர்.

2004-09 காலகட்டத்தில் இவ்வாறு நியமனம் பெற்றவர்கள், அதற்கு பதிலாக அவர்களது நிலங்களை லாலு பிரசாத் குடும்பத்தினருக்கு மாற்றம் செய்து கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பண மோசடி வழக்கை சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன.

இந்த வழக்கில் கடந்த சில மாதங்களாக லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி, அவர்களது மகனும், பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ், மகள்கள் மிசா பாரதி எம்.பி., சந்தா, ராகிணி ஆகியோரின் வாக்குமூலங்களை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தின் நெருங்கிய நண்பரான அமித் கத்யாலை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. மேலும் இந்த வழக்கில் அண்மையில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணை டெல்லி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

லாலு பிரசாத் யாதவ் மற்றும் பிற குற்றவாளிகளுக்கு எதிராக இறுதி குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை கடந்த மாதம் 6ம் தேதி டெல்லி கோர்ட்டில் தாக்கல் செய்தது. 38 வேட்பாளர்கள் உள்பட 78 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிகாரியின் அனுமதிக்காக காத்திருப்பதாக சிபிஐ கோர்ட்டில் தெரிவித்ததையடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணையை கோர்ட்டு ஒத்திவைத்தது. இதையடுத்து, இந்த வழக்கு கடந்த மாதம் 18ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்று (அக். 7ம் தேதி) கோர்ட்டில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ், மிசா பாரதி உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகினர். இதையடுத்து லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட 9 பேருக்கும் தலா ரூ.1 லட்சம் பிணை தொகையுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி விஷால் கோக்னே உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு விசாரணையின் போது அவர்களை கைது செய்யக்கூடாது என்றும் தெரிவித்தார். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com