அமெரிக்க பெண் கடத்தல் வழக்கில் திரைப்பட பாணியில் 24 மணி நேரத்தில் மீட்கப்பட்ட சம்பவம் - டெல்லி போலீசார் அதிரடி!


அமெரிக்க பெண் கடத்தல் வழக்கில் திரைப்பட பாணியில்  24 மணி நேரத்தில் மீட்கப்பட்ட சம்பவம் - டெல்லி போலீசார் அதிரடி!
x

அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த இளம்பெண் ஒருவர் போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் 24 மணி நேரத்தில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த இளம்பெண் ஒருவர் போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் 24 மணி நேரத்தில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த மே 3ஆம் தேதி அன்று டெல்லிக்கு வந்த அமெரிக்க சுற்றுலாப் பெண்மணி ஒருவர், தான் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதாகவும், அடையாளம் தெரியாத ஒரு நபரால் தாக்கப்படுவதாகவும் தனது குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்தார். ஆனால் அந்த பெண், தற்போது இருக்கும் இடத்தை அவர் குடும்பத்தினரிடம் தெரிவிக்கவில்லை.

உடனே, அமெரிக்க தூதரகத்தை தொடர்பு கொண்ட பெற்றோர் புகார் அளித்தனர். பின், இந்த புகார் அமெரிக்க தூதரகத்தால் புது டெல்லி மாவட்ட காவல்துறைக்கு அனுப்பப்பட்டது.

"அமெரிக்காவில் வசிக்கும் கிளோ ரெனி மெக்லாலின் மே 3, 2022 அன்று டெல்லிக்கு வந்தடைந்தார், அங்கு அவர் அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்டு தாக்கப்பட்டார். பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு, பாதுகாப்பற்ற சூழலில் தான் இருப்பதாக அந்த பெண் மின்னஞ்சல் மூலம் தனது பெற்றோருக்கு தகவல் அனுப்பியுள்ளார். அமெரிக்காவில் உள்ள தனது குடும்பத்தினரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்த பிறகு அவளை பற்றிய தகவல் ஏதும் இல்லை" என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து டெல்லி போலீசார் விசாரணையை தொடங்கினர்.

அந்த பெண் இந்தியாவுக்கு வந்து இரண்டரை மாதங்களுக்கும் மேலாகிறது. ஆனால் சமீபத்தில் தான் இந்த வழக்கு பதிவாகியுள்ளது. எனவே, சிசிடிவி காட்சிகள் மூலம் முயற்சிகள் அவரை பற்றிய தகவல் கிடைக்க வாய்ப்பில்லை. அமெரிக்க பெண், இந்தியாவில் எந்த பகுதியில் தற்போது இருக்கிறார் என்பதும் உறுதியாகத் தெரியவில்லை.

அப்படியிருக்கும் போது, சவாலான சூழலிலும், புகாரளித்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை 10ம் தேதியன்று, பாதிக்கப்பட்ட பெண் தனது தாயார் சாண்ட்ரா மெக்லாலினுடன் வாட்ஸ்அப்பில் வீடியோ அழைப்பு மூலம் பேசினார். அதன் பின் போலீசிடம் இந்த தகவல் கொடுக்கப்பட்டது.

இதை துப்பாக வைத்துக்கொண்டு போலீசார் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டனர்.

அந்த இளம்பெண் வாட்ஸ்அப்பில் பயன்படுத்திய இணையதள முகவரிகளைக் கண்டறிய சைபர் பிரிவு போலீசிடம் இருந்து தொழில்நுட்ப உதவி கோரப்பட்டது. வாட்ஸ்அப்பில் இருந்து பெறப்பட்ட தகவல்களை ஆய்வு செய்ததில், அமெரிக்க பெண்மணி, வேறொருவரின் வை-பை டேட்டாவைப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், ஜூலை 9 அன்று அமெரிக்காவுக்கு மின்னஞ்சல் அனுப்புவதற்காக அந்த பெண் பயன்படுத்திய இணையதள முகவரியை வழங்குவதற்காக யாஹூ.காம்-இல் இருந்து உதவி கோரப்பட்டது.

வெளிநாட்டிலிருந்து வந்துள்ளோரின் தகவல்கள் அடங்கிய குடியேற்ற படிவ விவரங்களின்படி, அந்த பெண் தனது தங்குமிட முகவரியை கிரேட்டர் நொய்டா, உத்தரபிரதேசம் என்று கொடுத்துள்ளார்.

அதன்படி, இணையதள முகவரியுடன் தொடர்புடைய மொபைல் எண் மற்றும் குடியேற்ற படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அவருடைய மாற்று மொபைல் எண் ஆகியவை பெறப்பட்டு, இந்த எண்ணின் விவரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன.மேலும், அவரது தோழியின் மொபைல் எண் கண்காணிக்கப்பட்டது. ரெச்சி என்பவரின் இணையதள முகவரியில் தான் அந்த பெண் கடைசியாக மின்னஞ்சல் அனுப்பினார் என்பது உறுதியானது.

அமெரிக்க பெண்ணை கண்டறிய இத்தனை தொழில்நுட்ப உதவிகளின் அடிப்படையில் பல்வேறு போலீஸ் குழுக்கள் உருவாக்கப்பட்டு சந்தேகத்திற்குரிய இடங்களுக்கு அனுப்பப்பட்டன. இதன் விளைவாக, குருகிராமில் இருந்து ரெச்சி என்பவரை கைது செய்வதில் போலீஸ் குழு வெற்றி பெற்றது.

தொடர்ச்சியான விசாரணையில், அவர் பெண்ணின் இருப்பிடத்தை வெளிப்படுத்தினார், இறுதியில் சிறுமி நொய்டாவில் கண்டுபிடிக்கப்பட்டார்.

இறுதியாக, அவர் தனது பெற்றோரை அச்சுறுத்துவதற்காகவே இந்த சம்பவத்தை அரங்கேற்றியதாக தெரியவந்துள்ளது. மேலும், அவரது விசா ஜூன் 6-ம் தேதியுடன் காலாவதியானதும் தெரியவந்துள்ளது.

பொய் புகாரளித்த அந்த அமெரிக்க பெண், ரெச்சியுடன் பேஸ்புக் மூலம் நட்பாக இருந்ததாகவும், இந்தியா வந்த பிறகு அவருடன் தங்கியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

அவர் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் என்பதும், அவர் வாஷிங்டன் டிசியில் வசிப்பவர் என்றும் அவரது தந்தை முன்னாள் ராணுவ அதிகாரி என்றும் பாடுவதில் ஆர்வம் கொண்டவர் என்ற தகவல்கள் தெரியவந்துள்ளது.

ரெச்சி என்பவர் மேல் படிப்பதற்காக 2017 ஆம் ஆண்டு நைஜீரியாவில் இருந்து இந்தியா வந்தார். அவருக்கும் பாடுவதில் ஆர்வம் உண்டு. படிப்பை முடித்ததும் மேடை நிகழ்ச்சியில் பாடத் தொடங்கினார். இருவருக்குமே பாடுவதில் ஆர்வம் உண்டு. அனேகமாக இதுவே அவர்களின் நட்புக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.


Next Story