டெல்லியில் அரசு கோப்புகளில் முதல்-மந்திரியின் கையெழுத்து இல்லை! 45 கோப்புகளை திருப்பி அனுப்பிய கவர்னர் அலுவலகம்


டெல்லியில் அரசு கோப்புகளில் முதல்-மந்திரியின் கையெழுத்து இல்லை! 45 கோப்புகளை திருப்பி அனுப்பிய கவர்னர் அலுவலகம்
x

டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் கையெழுத்து இல்லாமல் பல அரசு கோப்புகளை அனுப்பி வருவதாக கவர்னர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கையெழுத்து இல்லாமல் பல அரசு கோப்புகளை துணைநிலை கவர்னர் அலுவலகத்திற்கு அனுப்பி வருவதாக கவர்னர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கோப்புகளில் முதல் மந்திரி அலுவலக ஊழியர்கள் கையெழுத்திட்டிருப்பதாகவும், இந்தக் கோப்புகளில் கல்வித் துறை மற்றும் வக்ப் வாரியம் தொடர்பான பல துறை சார்ந்த முக்கிய ஆவணங்களும் அடங்கும். மேலும், இது அரசு விதிகளை மீறுவதாகும் என கவர்னர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இத்தகைய கோப்புகள், டெல்லி நிர்வாகம் பற்றியவை மட்டுமன்றி மிகவும் முக்கியமான பல விஷயங்களை உள்ளடக்கியது. அவற்றிலும் முதல் மந்திரி கையெழுத்து இல்லாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோப்புகளில், "முதல் மந்திரி பார்த்து மற்றும் ஒப்புதல் அளித்துள்ளார்" மற்றும் "முதல் மந்திரி பார்த்துள்ளார்" என்பதற்கான குறிப்புகள் மட்டும் உள்ளன. அவை கவர்னர் அலுவலகத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள முதல் மந்திரி அலுவலகத்தை சார்ந்த இளநிலை ஊழியர்களால் குறிப்பிடப்பட்டு உள்ளன.

அதன்படி, துணைநிலை கவர்னர் செயலகம் 45 கோப்புகளை டெல்லி முதல் மந்திரியிடம் திருப்பி அனுப்பி உள்ளது. டெல்லி, துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசால் வகுக்கப்பட்ட நடைமுறைகள் தொடர்பான விதிமீறல் இது என சுட்டிக்காட்டி கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், கவர்னர் அறிவுறுத்தியபடி, சுமூகமான மற்றும் பயனுள்ள நிர்வாகத்தின் நலனுக்காக ஒவ்வொரு கோப்பிலும் கையெழுத்திடுமாறு முதல் மந்திரி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

கவர்னர் அலுவலகம், பெரும்பாலான அரசு அலுவலகங்களில் நடைமுறையில் உள்ள இ-அலுவலக அமைப்பு முறையை அறிமுகப்படுத்துமாறு முதல் மந்திரியிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் கோப்புகளை தடையின்றி நகர்த்த முடியும்.


Next Story