ஜெர்மனியின் லுப்தான்சா நிறுவனத்தின் 800 விமானங்கள் ரத்து; விமான நிலையங்களில் நள்ளிரவு முதல் காத்திருக்கும் பயணிகள்!


ஜெர்மனியின் லுப்தான்சா நிறுவனத்தின் 800 விமானங்கள் ரத்து; விமான நிலையங்களில் நள்ளிரவு முதல் காத்திருக்கும் பயணிகள்!
x

ஜெர்மனியில் விமானிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் லுப்தான்சா நிறுவனம் 800 விமானங்களை ரத்து செய்துள்ளது.

புதுடெல்லி,

ஜெர்மனியில் விமானிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் ஜெர்மனியின் லுப்தான்சா நிறுவனம் 800 விமானங்களை ரத்து செய்துள்ளது.

இதனால் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் பல மணி நேரம் காத்திருக்கின்றனர். நள்ளிரவு முதல் ஜெர்மனி செல்ல வேண்டிய பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளானர்கள்.

டெல்லி மற்றும் நாட்டின் பிற முக்கிய பன்னாட்டு விமான நிலையங்களிலும் பயணிகள் சிரமத்தை எதிர்கொண்டனர். அவர்கள் மாற்று விமானங்கள் மூலம் அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணி ஒருவர் கூறுகையில், "நான் லுப்தான்சா ஏர்லைன்ஸ் மூலம் ஜெர்மனிக்கு செல்லவிருந்தேன். ஆனால் விமானம் ரத்து செய்யப்பட்டது. உடனே நான் எமிரேட் விமான நிறுவனங்களில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளேன். இதனால் நான் இப்போது துபாய் வழியாகச் செல்கிறேன், ஆனால் அங்கு நான் 14 மணிநேரம் காத்திருக்க வேண்டும்" என்றார்.

டிக்கெட் பணத்தை எப்போது திரும்பப் பெறுவோம் என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை என விமான நிலையத்தில் காத்திருக்கும் மற்றொரு பயணி கூறினார்.

போலீஸ் தரப்பில் கூறுகையில்;- நள்ளிரவு 12 மணியளவில் மூன்றாவது முனையத்தில் (டி3) 150 பேர் கூடியிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பின் லுப்தான்சா விமானிகளின் திடீர் உலகளாவிய வேலைநிறுத்தம் காரணமாக, விமானங்கள் நிறுத்தப்பட்டதை நாங்கள் அடைந்து தெரிந்துகொண்டோம்.

இதன் காரணமாக, ஜெர்மனியின் முனிச் மற்றும் பிராங்க்பர்ட்டுக்கு சுமார் 400 பயணிகளுடன் செல்ல வேண்டிய 2 விமானங்கள் முன்னறிவிப்பு இன்றி ரத்து செய்யப்பட்டன. பயணிகள் முனையத்தின் உள்ளே இருந்தார்கள் ஆனால் அவர்களது உறவினர்கள் வெளியே இருந்தனர். இதையறிந்த அவர்கள் கோபடைந்தனர்.

ஆனால் நாங்கள் விமான நிறுவனம் மற்றும் பயணிகளுடன் தகவல்தொடர்பை உறுதி செய்தோம். மீதமுள்ள சர்வதேச விமானங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதையும் நாங்கள் உறுதி செய்தோம். இதனால் நிலைமை சீரானது எனத் தெரிவிக்கப்பட்டது.


Next Story