24 ஆண்டுகளுக்கு முன் இறந்ததாக கூறப்படும் குற்றவாளியை கைது செய்த டெல்லி போலீசார்
24 ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததாக கூறப்படும் குற்றவாளியை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
புதுடெல்லி,
டெல்லியில் 24 ஆண்டுகளுக்கு முன்பாக இறந்ததாக அதிகாரப்பூர்வ ஆவணங்களில் அறிவிக்கப்பட்ட நபர் ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
அந்த நபர் மீது 1991-ம் ஆண்டு திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இறந்து விட்டதாக போலி ஆவணங்கள் தயாரித்து அந்த நபர் தலைமறைவாகினார். இதையடுத்து 1998-ல் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்களில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவர் இறந்துவிட்டதை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு, அந்த வழக்கை நிலுவையில் வைத்தது.
அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதால், டெல்லி போலீஸ் 24 ஆண்டுகளுக்கு முன்பு அவரைத் தேடுவதை நிறுத்தியது. இந்த நிலையில் சமீபத்தில் அந்த நபர் குறித்த தகவல் பவானா காவல்துறைக்கு கிடைத்தது. இதையடுத்து அவரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட டெல்லி போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.