ஜனநாயகமும், சுதந்திரமும் பெயரளவில் மட்டுமே உள்ளன: சஞ்சய் ராவத்
அரசியல் விஷமாகிவிட்டது, இதுபோல ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கூட இல்லை என்று சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார்.
மும்பை,
சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத். இவர் கடந்த ஆகஸ்ட் 1-ந் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதில் கடந்த 9-ந் தேதி அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்தநிலையில் அவர் மராட்டிய அரசியல் சூழல் மாசடைந்து உள்ளதாக சாம்னா பத்திரிகையில் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:- வெறுப்பை உணர முடிகிறது. தற்போது அரசியல்வாதிகள் தங்கள் எதிரிகள் உயிரோடு இருக்க கூடாது என்ற நிலைக்கு வந்துவிட்டனர். ஒருவரை ஒருவர் அழிக்க விரும்புவதால் மராட்டிய அரசியல் சூழல் மாசடைந்து உள்ளது.
காழ்ப்புணர்ச்சி அரசியல் முடிவுக்கு வர வேண்டும் என தேவேந்திர பட்னாவிஸ் கூறிதற்கு, அவர் உண்மையை தான் கூறி உள்ளார் என்றேன். உடனே ஊடகங்கள் நான் அடங்கிவிட்டதாக கூற தொடங்கிவிட்டார்கள். ஜனநாயகமும், சுதந்திரமும் தற்போது இல்லை. அவை பெயரளவில் மட்டுமே உள்ளன. அரசியல் விஷமாகிவிட்டது. இதுபோல ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கூட இல்லை.
தற்போது டெல்லி ஆட்சியாளர்கள் அவர்கள் விரும்புவதை கேட்கவிரும்புகிறார்கள். அவர்களின் விருப்படி செயல்படாதவர்கள் எதிரிகளாக கருதப்படுகிறார்கள். சீனா, பாகிஸ்தான் டெல்லி ஆட்சியாளர்களின் எதிரிகள் அல்ல. ஆனால் நேருக்கு நேராக உண்மையை பேசுபவர்கள் எதிரிகளாக கருதப்படுகிறார்கள். இதுபோன்ற தலைவர்களின் நாட்டின் மாண்பை குறைக்கின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.