தர்கா இடிப்பு: வேறு இடத்தில் அரசு சார்பில் நிலம் வழங்கப்படும்
பைரதேவரகொப்பாவில் தர்கா இடிக்கப்பட்டதற்கு பதிலாக வேறு இடத்தில் அரசு சார்பில் நிலம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
உப்பள்ளி:-
தர்கா இடிப்பு
தார்வார் மாவட்டம் உப்பள்ளி உள்ள பைரதேவரகொப்பா பகுதியில் சாலை விரிவாக்கப்பணிகள் நடக்க இருக்கிறது. இந்த சாலை பணிகளுக்கு அந்த பகுதியில் உள்ள பைரதேவரகொப்பா தர்கா இடையூறாக இருந்தது. இந்த தர்காவை அகற்ற மாவட்ட நிர்வாகம் முன் வந்தது. இதற்கு தர்காவை சேர்ந்த நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை ஏற்று விசாரித்த நீதிபதி தர்காவை இடிக்க உத்தரவிட்டார். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த தர்கா இடிக்கப்பட்டது.
முதல்-மந்திரி ஆய்வு
இந்நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை 2 நாள் சுற்றுப்பயணமாக உப்பள்ளிக்கு வந்திருந்தார். அப்போது பைரதேவரகொப்பா பகுதிக்கு சென்ற அவர் இடிக்கப்பட்ட தர்காவை பார்வையிட்டார். அப்போது உப்பள்ளியில் உள்ள அஞ்சுமான் இஸ்லாம் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளை முன்னாள் காங்கிரஸ் மூத்த மந்திரி ஏ.எம்.ஹிண்டஸ்கிரி மற்றும் முஸ்லிம் அமைப்பை சேர்ந்த எம்.எம்.சி.சொவனூர், வாக்காப் முல்லா, அல்தாப் அல்லூர், அல்தாப் சித்தூர் உள்பட 50-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை சந்தித்தனர். அப்போது அவர்கள் இடிக்கப்பட்ட தர்காவிற்கு பதிலாக மாற்று இடம் வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஏற்று கொண்டார்.
இடம் வழங்கப்படும்
இதையடுத்து நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:- பைரதேவரகொப்பா தர்கா இடிக்கப்பட்ட விவகாரத்தில் முஸ்லிம்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். சாலை விரிவாக்கப்பணிக்காக இந்த தர்கா அகற்றப்பட்டது என்று அனைவருக்கும் தெரியும். உப்பள்ளி அஞ்சுமன் இஸ்லாம் அமைப்பினர் கோர்ட்டின் உத்தரவை மதித்துள்ளனர். அவர்களுக்கு வேறு இடங்களில் தர்கா கட்டி கொள்ள அரசு உதவி செய்யும்.
எந்த இடங்களை காட்டுகிறோர்களோ அந்த இடத்தில் தர்கா கட்டி கொள்ள அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். இடமும் வழங்கப்படும். இது தொடர்பாக அஞ்சுமான் முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்கள் கோரிக்கை மனு வழங்கியுள்ளனர். அந்த கோரிக்கையின் பேரில் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூரு திரும்புகிறார்
இதையடுத்து உப்பள்ளியில் இருந்து ஹாவேரி சென்ற முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சிக்காமில் உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதையடுத்து அவர் தார்வாரில் உள்ள கே.சி.டி வளாகத்தில் நடந்த வீரராணி, கித்தூர் ராணி சென்னம்மா மேடை நாடகத்தை தொடங்கி வைத்தார். வைத்தார். அந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு இரவு உப்பள்ளி திருப்பினார். அங்கிருந்து இன்று காலை விமானம் மூலம் பெங்களூரு புறப்பட இருக்கிறார்.