பணமதிப்பிழப்பு, தவறாக ஜிஎஸ்டி கொள்கையே வேலை வாய்ப்பின்மைக்கு காரணம் - ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்


பணமதிப்பிழப்பு, தவறாக ஜிஎஸ்டி கொள்கையே வேலை வாய்ப்பின்மைக்கு காரணம் - ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்
x

பணமதிப்பிழப்பு, மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கைகள் தான் வேலையில்லா திண்டாட்டத்திற்கு காரணம் என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

ஜெய்ப்பூர்,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த நடைபயணம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேச மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது காங்கிரஸ் ஆளும் கட்சியாக உள்ள ராஜஸ்தானின் பூண்டி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் பங்கேற்றுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், பணமதிப்பிழப்பு, தவறான ஜி.எஸ்.டி. கொள்கை மற்றும் மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் தான் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டத்தை நாடு எதிர்கொள்வதற்கு காரணமாகும்.

விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை மற்றும் தவறான ஜிஎஸ்டி கொள்கை மற்றும் சிறு தொழில்கள் மூடப்படுவதற்கு எதிராக நாங்கள் குரல் எழுப்புகிறோம்.

மாநிலங்களுக்கிடையே, ஏழை மற்றும் பணக்காரர்களிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருகின்றன. நடுத்தர வர்க்கம் ஒடுக்கப்படுகிறது. இதை இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் சுட்டிக்காட்டுகிறோம்.

நகர்ப்புறங்களில் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க இந்திரா காந்தி நகர்ப்புற வேலை உறுதி திட்டத்தை முதல்-மந்திரி அசோக் கெலாட் சிறப்பாக செயல்படுத்தியதாக ஜெயராம் ரமேஷ் பாராட்டினார்.

இமாச்சலபிரதேசத்தின் புதிய முதல்-மந்திரி பதவியேற்பு விழாவில் பங்கேற்க அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஒரே ஹெலிகாப்டரில் சென்றது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெய்ராம் ரமேஷ்,

கட்சி தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். இரு தலைவர்களும் எங்கள் சொத்து. ஒருவர் அனுபவம் வாய்ந்தவர், கட்சியிலும், மாநிலத்திலும் உயர் பதவியில் இருக்கிறார். சச்சின் பைலட் இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறார். மக்களுக்கும் கட்சிக்கும் இவர்கள் இருவரும் தேவை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story