'அக்னிபத்' திட்டத்துக்கு எதிராக கர்நாடகத்தில் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் சார்பில் வருகிற 27-ந் தேதி ஆர்ப்பாட்டம்


அக்னிபத் திட்டத்துக்கு எதிராக கர்நாடகத்தில் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் சார்பில் வருகிற 27-ந் தேதி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Jun 2022 9:35 PM GMT (Updated: 27 Jun 2022 1:31 AM GMT)

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக கர்நாடகத்தில் வருகிற 27-ந் தேதி 224 தொகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் செயல் தலைவர் ராமலிங்கரெட்டி கூறியுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் ராமலிங்கரெட்டி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு எதிராக 224 சட்டசபை தொகுதிகளில் வருகிற 27-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகுதிகளில் எங்கள் எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். கட்சி எம்.எல்.ஏ.க்கள் இல்லாத தொகுதிகளில் கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள் தலைமை தாங்குவார்கள்.பிரதமர் மோடி ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக உறுதியளித்தார்.

அதன்படி கடந்த 8 ஆண்டுகளில் 16 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அந்த அளவுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகவில்லை. வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. அதற்கு எதிராக விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் தீவிர போராட்டம் நடத்தின. அதனால் அந்த வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றது.

மாற்றத்திற்கான காற்று

மத பிரச்சினைகள் மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டை நாசமாக்கிவிட்டனர். விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தி ஜனநாயக்தை அழிக்கிறார்கள். இப்போது அக்னிபத் என்ற பெயரில் நாட்டின் பாதுகாப்பை நாசமாக்குகிறார்கள். பெங்களூரு மாநகராட்சி வார்டுகள் மறுவரையறையை சரியாக செய்யவில்லை.

இதற்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும். கர்நாடகத்தில் மாற்றத்திற்கான காற்று வீசுகிறது. வருகிற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும்.

இவ்வாறு ராமலிங்கரெட்டி கூறினார்.


Next Story