நாளுக்கு நாள் கூட்டம் அலைமோதுவதால் சபரிமலையில் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் பக்தர்கள்...!
நாளுக்கு நாள் கூட்டம் அலைமோதுவதால் சபரிமலையில் 10 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். பேட்டை துள்ளல் நிகழ்ச்சி 11-ந் தேதி நடக்கிறது.
திருவனந்தபுரம்,
2022-2023-ம் ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலை கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது.
41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகத்திற்கு பிறகு கடந்த மாதம் 27-ந் தேதி மண்டல பூஜை நடந்தது. பிறகு அன்றைய தினம் இரவு நடை அடைக்கப்பட்டது. பின்னர் மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் 30-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். ்பக்தர்களின் கூட்டம் கட்டுக் கடங்காமல் இருப்பதால் இந்த சீசனின் பாதியில் தரிசனம் செய்ய கூடுதலாக 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் 8 முதல் 10 மணி நேரம் வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. தினமும் 1 லட்சம் பக்தர்கள் வருகிறார்கள். இதற்கிடையே மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் வருகிற 14- ந் தேதி நடைபெறுகிறது. மகர விளக்கு தினத்தில் அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பத்தனம்திட்டை மாவட்டம் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த திருவாபரணங்கள் 12-ந் தேதி பந்தளம் ராஜ பிரதிநிதியின் முன்னிலையில் ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. முன்னதாக 11-ந் தேதி எருமேலியில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி அம்பலப்புழை மற்றும் ஆலங்காடு அய்யப்ப பக்தர்கள் குழு சார்பில் நடைபெறும்.
இந்தநிலையில் சபரிமலை அய்யப்பன் கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மகர விளக்கின் முன்னோடியாக 14-ந் தேதி திருவிதாங்கூர் ராஜ வம்சத்தின் தலைநகரான திருவனந்தபுரம் கொட்டாரத்தில் இருந்து கொண்டு வரப்படும் சிறப்பு நெய் மூலம் அபிஷேகம் நடைபெறும். அதைத்தொடர்ந்து மகர சங்கரம பூஜை நடைபெறும். முன்னதாக 12, 13-ந் தேதிகளில் சன்னிதானத்தில் இரவு பிரசாத சுத்தி, வாஸ்து ஹோமம், வாஸ்து பலி, வாஸ்து கலசம், அஸ்திர கலசம் ஆகியவை நடைபெறும். 14-ந் தேதி மாலை 5.30 மணிக்கு சன்னிதானம் வந்தடையும் திருவாபரண ஊர்வலத்திற்கு சன்னிதானத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
பிறகு திருவாபரணங்கள் அய்யப் பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து 6.30 மணிக்கு பொன்னம்பல மேட்டில் ஜோதிவடிவில் அய்யப்பன் பக்தர்களுக்கு காட்சி தருவார். தொடர்ந்து நடைபெறும் வழக்கமான பூஜை, வழிபாடுகளுக்கு பிறகு 20-ந் தேதி காலை 7 மணிக்கு பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதியின் தரிசனத்திற்கு பிறகு நடை அடைக்கப்பட்டு நடப்பு மண்டல, மகர விளக்கு சீசன் நிறைவு பெறும். மீண்டும் மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை அடுத்த மாதம் 12-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.