மரப சோதனைக்கு அனுமதி கோரியவரின் மனு தள்ளுபடி


மரப சோதனைக்கு அனுமதி கோரியவரின் மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 12 Dec 2022 12:59 AM IST (Updated: 12 Dec 2022 12:59 AM IST)
t-max-icont-min-icon

தனக்கும், மனைவி-குழந்தைக்கும் 2-வது முறையாக டி.என்.ஏ சோதனைக்கு அனுமதி கோரியவரின் மனுவை தள்ளுபடி செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:-

மனைவியின் நடத்தையில் சந்தேகம்

பெங்களூரு நகரில் ஒரு நபர் வசித்து வருகிறார். அவருக்கு திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர். இதற்கிடையில், தனது மனைவியின் நடத்தையில் அந்த நபருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் மனைவிக்கு பிறந்த குழந்தை, தனக்கு சொந்தமில்லை என்று கூறி வந்தார். இதையடுத்து, கோர்ட்டு அனுமதி பெற்று அந்த குழந்தை தனக்கு பிறந்ததா? என்பதை கண்டுபிடிக்க பெங்களூரு மடிவாளாவில் உள்ள ஆய்வகத்தில் அந்த நபர், அவரது மனைவி, குழந்தை ஆகிய 3 பேருக்கும் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டது.

அந்த பரிசோதனையில் அந்த நபருக்கு தான் குழந்தை பிறந்தது தெரியவந்தது. ஆனால் மடிவாளாவில் நடந்த டி.என்.ஏ. பரிசோதனையில் தவறு நடந்திருப்பதாக அந்த நபர் கூறினார். மேலும் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருப்பதால், தனக்கும், குழந்தைக்கும், மனைவிக்கும் 2-வது முறையாக ஐதராபாத்தில் உள்ள ஆய்வகத்தில் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி கர்நாடக ஐகோர்ட்டில் அந்த நபர் மனு தாக்கல் செய்தார்.

மனு தள்ளுபடி

அந்த மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், மடிவாளா ஆய்வகத்தில் நடந்த டி.என்.ஏ. பரிசோதனையில் தவறு நடந்திருப்பதாக மனுதாரர் கருதுவதால், 2-வது முறையாக ஐதராபாத்தில் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று வாதிட்டார். இதற்கு ஐகோர்ட்டு நீதிபதி நிராகரித்து விட்டார். மேலும் 2-வது முறையாக டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

மனுவை தள்ளுபடி செய்துவிட்டு நீதிபதி கூறுகையில், ஏற்கனவே நடந்த டி.என்.ஏ. பரிசோதனை சரியில்லை என்று மனுதாரர் கூறி வருகிறார். 2-வது முறையாக டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுமதி வழங்கி, அவருக்கு சாதகமாக முடிவு வரவில்லை என்றால், மீண்டும் டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்வார். அதுபோன்று நடைபெறக்கூடாது என்பதற்காக தான் அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார்.


Next Story