காங்கிரஸ் கட்சி, பயங்கரவாதிகளை ஆதரிக்கிறதா?; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கேள்வி
காங்கிரஸ் கட்சி பயங்கரவாதிகளை ஆதரிக்கிறதா? என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு:
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சந்தேகம் கிளப்புகிறார்
மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் சந்தேகம் கிளப்புகிறார். ஒவ்வொரு முறையும் நாட்டின் தார்மிகம் மற்றும் போலீஸ் துறையின் தார்மிகத்தை குறைப்பது தேசபக்தரின் வேலை அல்ல. பயங்கரவாதிகள் உரிய ஆதாரத்துடன் சிக்கும்போது, அதன் விசாரணை குறித்து கேள்வி எழுப்புவது சரியல்ல. இத்தகைய கருத்துகள் பயங்கரவாத அமைப்புகளுக்கு மேலும் ஊக்கத்தை அளிப்பதாக அமையும்.
ஒருவர் வெடிபொருட்களை குக்கரில் போட்டு கொண்டு ஆட்டோவில் சென்றபோது அது வெடித்துள்ளது. அதை மங்களூருவில் வெடிக்க செய்ய வேண்டும் என்ற நோக்கம் இருந்துள்ளது. போலீசாரிடம் சிக்கியுள்ள நபர், தனது உடல் அடையாளத்தை மாற்றி கொண்டு இருந்து வந்துள்ளார். அவர் மீது ஏற்கனவே 2, 3 வழக்குகள் உள்ளன. அவருக்கு நமது நாட்டை தாண்டி தொடர்பு இருந்தது என்பதும் உண்மை.
தேர்தல் தந்திரம்
இத்தகைய நேரத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், ஊழலை மூடிமறைக்க ஏற்படுத்தப்பட்ட சம்பவம் என்று கூறி இருப்பது சரியல்ல. பயங்கரவாத செயல்களை மென்மையாக பார்ப்பது, பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பது, தூக்கில் போடும்போது விமர்சிப்பது என்பது அவரது வழக்கம். காங்கிரஸ் கட்சி பயங்கரவாதிகளை ஆதரிக்கிறதா? அல்லது தேசபக்தர்களை ஆதரிக்கிறதா? என்பதை அக்கட்சி தலைவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
தேர்தலில் ஒரு சமூகத்தின் வாக்குகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் இந்த கருத்தை கூறியுள்ளார். இது அவரது தேர்தல் தந்திரம். காங்கிரசாரின் ஏமாற்று வேலை எடுபடாது. பா.ஜனதாவினர் சட்டவிரோதமாக வாக்களிக்க திட்டமிட்டுள்ளதாக டி.கே.சிவக்குமாா் சொல்கிறார். இவ்வாறு செய்யும் பழக்கம் காங்கிரசுக்கு தான் உள்ளது. வாக்காளர் பட்டியல் முறைகேட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.