தெரியாது... ஆனா முன்பே தெரியும்; டெல்லி இளம்பெண் மரண விவகாரத்தில் முன்னுக்கு பின் முரணான வாக்குமூலம்


தெரியாது... ஆனா முன்பே தெரியும்; டெல்லி இளம்பெண் மரண விவகாரத்தில் முன்னுக்கு பின் முரணான வாக்குமூலம்
x
தினத்தந்தி 9 Jan 2023 10:09 AM GMT (Updated: 9 Jan 2023 10:14 AM GMT)

டெல்லி இளம்பெண் மரண விவகாரத்தில் அஞ்சலி காரில் சிக்கியது மோதல் நடந்த உடனேயே தெரியும் என போலீசில் வாக்குமூலம் அளிக்கப்பட்டு உள்ளது.




புதுடெல்லி,


டெல்லியில் கஞ்சவாலா நகரில் சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஸ்கூட்டியில் தோழியுடன் சென்ற அஞ்சலி சிங் (வயது 20) என்ற இளம்பெண், புது வருட தினத்தன்று தனது நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் சார்பிலான பணிகளை இரவு வரை இருந்து முடித்து கொடுத்து விட்டு பின்னர் வீட்டுக்கு புறப்பட்டு உள்ளார்.

அவர் மீது அதிகாலை கார் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதுபற்றி அதிகாலை 1.30 மணியளவிலான சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் வெளியிட்டனர். எனினும், டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் கூறும்போது, அதிகாலை 2.22 மணியளவில், பெண் ஒருவர் காரில் சிக்கியுள்ளார் என போலீசாருக்கு தகவல் சென்றுள்ளது. ஆனால், 4.15 மணிக்கு நிர்வாண நிலையிலான உடல் கிடக்கிறது என்ற தகவல் கிடைத்த பின்னரே போலீசார் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

13 கி.மீ. தொலைவிலான அனைத்து சி.சி.டி.வி. காட்சிகள் பதிவையும் போலீசார் ஆய்வு செய்யவில்லை. அனைத்து சாட்சிகளின் வாக்குமூலமும் பெறப்படவில்லை. 302 பிரிவு சேர்க்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் போலீசாரின் நடவடிக்கையில் திருப்தி இல்லை என குற்றச்சாட்டாக கூறினார்.

இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என பரிந்துரை செய்கிறேன். நிதியின் மொபைல் போனை நாங்கள் இன்னும் பறிமுதல் செய்யவில்லை என டெல்லி போலீசார் கூறுகின்றனர். அது மிக முக்கிய சான்றாக இருக்கும். போலீசிடம் அது ஏன் இன்னும் வந்து சேரவில்லை என்பது எனக்கு புரியவில்லை என்று அவர் கூறினார்.

இந்த சம்பவத்தில் காரில் இருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவின்பேரில் இளம்பெண் மரணம் பற்றிய விரிவான அறிக்கையை அளிக்கும்படி டெல்லி காவல் துறை ஆணையரிடம் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. இதன்படி, டெல்லி போலீசில் சிறப்பு காவல் ஆணையாளராக உள்ள ஷாலினி சிங்கை விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளது.

அஞ்சலிக்கு நடந்த பிரேத பரிசோதனை முடிந்துள்ளது. இந்நிலையில், அஞ்சலியுடன் சம்பவத்தன்று, நிதி என்ற மற்றொரு பெண்ணும் பயணம் செய்த தகவலை போலீசார் தெரிவித்தனர். இதன்படி, அஞ்சலி வாகனத்தின் பின்புறத்தில் அமர்ந்தும், நிதி என்ற அவரது தோழி ஸ்கூட்டியை ஓட்டியும் சென்றுள்ளார் என போலீசார் கூறியுள்ளனர். இவர்கள் இருவரும் ஓட்டல் ஒன்றில் இருந்து வெளிவரும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில், அஞ்சலியின் இறுதி சடங்குகள் நிறைவடைந்த பின்னர், அவரது தோழி என்று கூறி கொண்டு முகமூடி அணிந்தபடி நிதி என்பவர் செய்தியாளர்களிடம் சாட்சி கூறியுள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, அவர் (உயிரிழந்த அஞ்சலி) குடிபோதையில் இருந்த நிலையில், வாகனம் ஓட்ட வேண்டும் என என்னிடம் வற்புறுத்தினார்.

எங்களை கார் மோதியதும், ஒரு புறம் நான் விழுந்து கிடந்தேன். காரின் அடியில் தோழி சிக்கி கொண்டார். காரின் கீழ் அஞ்சலி சிக்கி கொண்டார் என்பது காரில் இருந்தவர்களுக்கு தெரியும். நான் பயந்துவிட்டேன். போலீசாரிடம் எதுவும் கூறாமல் வீட்டுக்கு சென்று விட்டேன். யாரிடமும் எதுவும் கூறவில்லை என கூறினார்.

எனினும் இந்த வழக்கில், அஞ்சலியின் தாய்வழி மாமா செய்தியாளர்களிடம் கூறும்போது, நிதி இதற்கு முன்பு மறைந்து இருந்துள்ளார். அஞ்சலி இறுதி சடங்குகள் நிறைவடைந்ததும் வெளியே வந்து விட்டார். சம்பவம் நடந்தவுடன், அதனை போலீசிடமோ அல்லது குடும்பத்தினரிடமோ தெரிவிக்க வேண்டும் என்ற மனித தன்மை அவருக்கு இல்லையா? அப்போது அவர் பயந்து விட்டார் என கூறுகிறார். இப்போது அவருக்கு பயமில்லையா? இது நிதியின் சதி திட்டம் என கூறியுள்ளார்.

அஞ்சலிக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் கிடையாது. அவரது தோழி இந்த விவகாரத்தில் பொய் கூறுகிறார். நிதி கூறியது போன்று அந்த இரவில் (சம்பவம் நடந்தபோது) அஞ்சலி குடித்திருந்தால், அது பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும்.

இதில் இருந்தே நிதி பொய் கூறுகிறார் என தெரிகிறது என்று கூறியுள்ளார். அஞ்சலியை மோதி, தள்ளி, காரில் இழுத்து சென்ற குற்றவாளிகள் 5 பேர் மீது 302-வது சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார். நிதியின் மீது 304-வது சட்ட பிரிவு பதிவு செய்யப்பட வேண்டும். அரசிடம் இதனை கோரிக்கையாக வைப்போம் என கூறினார்.

ஆனால், அஞ்சலியின் தாயார் கூறும்போது, நிதி யாரென்றே எனக்கு தெரியாது. நான் ஒருபோதும் அவரை பார்த்ததேயில்லை. அவர் அஞ்சலியின் தோழியா? உண்மையில் தோழி என்றால் அவர் எப்படி சம்பவம் நடந்தபோது, அந்த பகுதியில் இருந்து தப்பி சென்றிருக்க முடியும்? இது நன்றாக திட்டமிடப்பட்ட சதி.

இதில் நிதிக்கும் தொடர்பு இருக்க கூடும். அவரது வாக்குமூலம் பற்றி முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கூறினார். அஞ்சலிக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் கிடையாது. குடிபோதையில் ஒரு நாளும் அவர் வீட்டுக்கு வந்தது கிடையாது என்றும் கூறியுள்ளார்.

அஞ்சலியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், இளம்பெண் மரணம் அடைந்தபோது அவரது வயிற்றில் பாதியளவு செரிக்கப்பட்ட உணவு பொருட்கள் இருந்தன என தெரிவிக்கின்றது. எனினும், அவர் குடித்திருந்தாரா என்பது பற்றி அறிவதற்காக ரசாயன பகுப்பாய்வு செய்ய அவரது உள்ளுறுப்பு மாதிரிகள் எடுத்து பாதுகாக்கப்பட்டு உள்ளன என தெரிவிக்கப்பட்டது.

எனினும், இந்த வழக்கிற்கு அது தொடர்புடைய ஒன்று கிடையாது என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

முதலில், தோழி நிதி மீது வழக்கு எதுவும் இல்லை என டெல்லி போலீசார் கூறிய நிலையில், 30 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் சில ஆண்டுகளுக்கு முன் நிதிக்கு தொடர்பு இருந்ததும், அந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்ட விவரம் தெரிய வந்தது. அவருடைய கூட்டாளி 2 பேரும் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

வழக்கில், குற்ற செயலில் ஈடுபட்டதுடன், ஆள் மாறாட்டமும் நடந்துள்ள விவரம் பின்னர் தெரிய வந்தது. இதன்படி, அங்குஷ் மற்றும் அஷுதோஷ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால், மொத்த கைது எண்ணிக்கை ஏழானது.

இந்த நிலையில் 7-வது குற்றவாளியான அங்குஷ் என்பவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு விட்டது. இவர், குற்றவாளிகள் ஆட்டோவில் தப்பிக்க சதி திட்டம் தீட்டி உதவியவர் என போலீசார் கூறுகின்றனர். இதனால், அஷுதோஷ் உள்பட மீதமுள்ள 6 பேர் காவலில் உள்ளனர்.

சம்பவம் நடந்து 2 மணிநேரத்திற்கு பின்பு, குற்றவாளிகள் உடன் அஷுதோஷ் பேசிய காட்சிகள் போலீசாரிடம் சிக்கி உள்ளன. இதனை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழக்கில், காரின் அடியில் அஞ்சலி சிக்கியது தங்களுக்கு தெரியாது என்றும், காரில் அதிக சத்தத்துடன் இசை ஒலித்து கொண்டிருந்தது. அதனால், தங்களுக்கு எதுவும் தெரியாது என காரில் இருந்தவர்கள் கூறினர்.

ஆனால், போலீசார் தற்போது வெளியிட்டு உள்ள செய்தியில், அஞ்சலி காரில் சிக்கியது மோதல் நடந்த உடனேயே தெரியும் என குற்றவாளிகள் தரப்பில் வாக்குமூலம் அளிக்கப்பட்டு உள்ளது.

காரில் இருந்த குற்றவாளிகள், அஞ்சலியை மீட்க முன்வரவில்லை. ஏனெனில், காரை விட்டு இறங்கினால், அஞ்சலியை மீட்டால், அதனை யாரேனும் பார்த்து விட்டால் சட்ட சிக்கலில் சிக்கி விடுவோம் என்ற பயமே காரணம் என போலீசில் தெரிவித்து உள்ளனர்.

இதுபோன்று, முன்பு எதுவும் தெரியாது என கூறி விட்டு, தொடர் விசாரணையின்போது, மோதல் நடந்த சில நிமிடங்களிலேயே தெரியும் என முன்னுக்கு பின் முரணான தகவல்களை அவர்கள் தெரிவித்து உள்ளனர் என போலீசார் கூறியுள்ளனர். அதனால், ஒவ்வொரு கோணத்திலும் வழக்கை விசாரணை செய்வோம் என அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story