"குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு பெண்களை திருமணம் செய்து வைக்காதீர்கள்" - மத்திய மந்திரி கவுஷல் கிஷோர்


குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு பெண்களை திருமணம் செய்து வைக்காதீர்கள் - மத்திய மந்திரி கவுஷல் கிஷோர்
x

குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு பெண்களை திருமணம் செய்து வைக்காதீர்கள் என்று மத்திய மந்திரி கவுஷல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

சுல்தான்பூர்,

உத்தரபிரதேச மாநிலம் லம்புவா சட்டசபை தொகுதியில் நடைபெற்ற ஒரு போதைப்பழக்க மீட்பு நிகழ்ச்சியில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார ராஜாங்க மந்திரி கவுஷல் கிஷோர் பேசியதாவது:-

எனது மகன் ஆகாஷ் கிஷோருக்கு அவனது நண்பர்களால் மதுப்பழக்கம் ஏற்பட்டது. அதனால் அவனை ஒரு போதை அடிமைகள் மீட்பு மையத்தில் சேர்த்தோம். அவன் அந்தப் பழக்கத்தில் இருந்து மீண்டுவிட்டதாக கருதி, 6 மாதங்கள் கழித்து திருமணம் செய்துவைத்தோம். ஆனால் திருமணத்துக்குப் பின் அவன் மீண்டும் குடிக்கத் தொடங்கினான். அதனாலேயே இறந்தும் போனான். 2 ஆண்டுகளுக்கு முன்பு அவன் இறந்தபோது என் பேரனுக்கு 2 வயதுகூட ஆகவில்லை.

'ஒரு குடிகாரரின் ஆயுள் ரொம்ப குறுகியது. நான் ஒரு எம்.பி.யாகவும், என் மனைவி ஒரு எம்.எல்.ஏ.வாகவும் இருந்துமே எங்கள் மகனை காப்பாற்ற முடியவில்லை. அப்படி இருக்கும்போது, ஒரு சாதாரண மனிதரால் எப்படி தங்கள் பிள்ளையைக் காப்பாற்ற முடியும்? நான் என் மகனை காப்பாற்றத் தவறியதால் என் மருமகள் விதவை ஆகிவிட்டார்.

தயவுசெய்து, உங்கள் மகள்கள், சகோதரிகளுக்கு இந்த நிலை வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு உங்கள் வீட்டு பெண்களை திருமணம் செய்து கொடுக்காதீர்கள். குடிப்பழக்கம் உள்ள ஒரு அதிகாரியைவிட, அந்தப் பழக்கம் இல்லாத ஒரு ரிக்ஷாக்காரர் அல்லது கூலித்தொழிலாளி நல்ல மாப்பிள்ளைதான்.

நம் நாட்டில் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நடந்த 90 ஆண்டு போராட்டத்திலேயே 6.32 லட்சம் பேர்தான் இறந்தனர். ஆனால் போதைப்பழக்கத்தால் ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சம் பேர் செத்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே, போதைப்பழக்கத்தின் பாதிப்பு குறித்து மாணவப் பருவத்திலேயே, பள்ளி காலைப் பிரார்த்தனையின்போது விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story