சந்திரயான் திட்டத்துக்கு அறிவியலுக்கு புறம்பான சாயம் பூசாதீர் - மக்களவை விவாதத்தில் ஆ.ராசா வலியுறுத்தல்


சந்திரயான் திட்டத்துக்கு அறிவியலுக்கு புறம்பான சாயம் பூசாதீர் - மக்களவை விவாதத்தில் ஆ.ராசா வலியுறுத்தல்
x

கோப்புப்படம்

சந்திரயான் திட்டத்துக்கு அறிவியலுக்கு புறம்பான சாயம் பூசாதீர்கள் என்று மக்களவையில் நடந்த விவாதத்தில் ஆ.ராசா பேசினார்.

புதுடெல்லி,

சந்திரயான்-3 திட்ட வெற்றி தொடர்பாக மக்களவையில் நேற்று விவாதம் நடந்தது. அதில், தி.மு.க. உறுப்பினர் ஆ.ராசா பேசியதாவது:-

நிலாவுக்கு விண்கலம் அனுப்பிய அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது.

1950-ம் ஆண்டுவரை, பிரபஞ்சமும், விண்மீன் மண்டலமும் புதிராக கருதப்பட்டன. ஆனால், சந்திரயான்-3 விண்கலத்தை சரியான சுற்றுவட்டப்பாதையில் நிறுத்தியதன் மூலம், புராண கட்டுக்கதை தகர்க்கப்பட்டுள்ளது. இது, திராவிட கொள்கைக்கு கிடைத்த வெற்றி.

விக்ரம் சாராபாய்

சந்திரயான் திட்டத்துக்கு அறிவியலுக்கு புறம்பான சாயம் பூசாதீர்கள். அமெரிக்காவோ, சீனாவோ, ரஷியாவோ அப்படி செய்யவில்லை. சந்திரயான்-3 திட்டத்துக்கு விக்ரம் சாராபாய் பெயரை சூட்டுங்கள்.

அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் ஏற்படும் முன்னேற்றங்கள், சமூகத்துக்கு பலன் தருவதாக இருக்க வேண்டும்.

ஒருபுறம் சந்திரயானை விண்வெளிக்கு அனுப்புகிறார்கள். மற்றொரு புறம், விஸ்வகர்மா திட்டத்தை தொடங்கியதற்காக பிரதமர் பெருமைப்படுகிறார்.

விஸ்வகர்மா திட்டம், பாரம்பரிய கைவினை தொழில்களை செய்பவர்கள், அதே தொழிலேயே செய்ய ஊக்குவிக்கிறது என்று அவர் பேசினார்.

சனாதன தர்மம்

பா.ஜனதா உறுப்பினர் நிஷிகாந்த் துபே, ஆ.ராசாவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் பேசியதாவது:-

ஒருவர் தனக்கு பிடித்த மதத்தை பின்பற்ற அரசியல் சட்டத்தின் 25-வது பிரிவு அனுமதிக்கிறது. அவர்களின் மத நம்பிக்கையை யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால், ஆ.ராசா எங்களை தாக்குகிறார். நாங்கள் சனாதன தர்மத்தை பின்பற்றுகிறோம். நாங்கள் இந்து. எங்களை தாக்க உங்களுக்கு உரிமை கிடையாது என்று அவர் பேசினார்.

சபாநாயகர் இருக்கையில் இருந்த ராஜேந்திர அகர்வால், கவனமாக பேசும்படி ஆ.ராசாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

பா.ஜனதாவுக்கு பங்கு இல்லை

விவாதத்தில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் பேசியதாவது:-

சந்திரயான்-3, நிலவில் தரை இறங்கியதை டி.வி.யில் பார்த்தோம். திடீரென பிரதமர் மோடியின் புகைப்படம் திரையில் தோன்றியது.

சந்திரயான்-3 திட்ட வெற்றி, எந்த தனிநபரின் முயற்சியாலும் ஏற்பட்டது அல்ல. நேரு, இந்திரா காந்தி, விஞ்ஞானிகள் விக்ரம் சாராபாய், சதீஷ் தவான், யு.ஆர்.ராவ் போன்றவர்களின் முயற்சியால் ஏற்பட்டது. பா.ஜனதாவுக்கு இதில் எந்த பங்கும் இல்லை என்று அவர் பேசினார்.


Next Story