மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தை சாதாரணமாக கருத வேண்டாம்; டி.ஜி.பி. பிரவீன் சூட்டுக்கு, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எச்சரிக்கை


மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தை சாதாரணமாக கருத வேண்டாம்; டி.ஜி.பி. பிரவீன் சூட்டுக்கு, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எச்சரிக்கை
x

மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தை சாதாரணமாக கருத வேண்டாம் என்று போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட்டுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூரு:

போலீஸ் டி.ஜி.பி.யிடம் தகவல்

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் கடந்த 19-ந் தேதி ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்திருந்தது. இந்த வெடிகுண்டு சம்பவம் மங்களூரு மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட்டை நேற்று காலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது மங்களூருவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்தும், போலீஸ் விசாரணை மற்றும் பயங்கரவாதிகளுக்கான தொடர்பு குறித்த அனைத்து தகவல்களையும் டி.ஜி.பி. பிரவீன் சூட்டிடம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கேட்டு அறிந்து கொண்டார். மேலும் விசாரணையை தீவிரப்படுத்தும்படியும், குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படியும் அவர் கூறியுள்ளார்.

பசவராஜ் பொம்மை உத்தரவு

அதே நேரத்தில் மங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்ட விசாரணையின் போது கிடைத்த அனைத்து தகவல்களையும், பயங்கரவாதிகளுக்கு இருக்கும் தொடர்பு குறித்தும் தேசிய புலனாய்வு முகமை, மத்திய உளவுத்துறை உள்ளிட்ட மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து விசாரணை அமைப்புகளுக்கும் தகவல்களை தெரிவிக்கும்படி போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட்டுக்கு, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குண்டுவெடிப்பு சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் தனக்கு தெரிவிக்கும்படியும், குண்டுவெடிப்பு குறித்து விசாரித்து வரும் சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அலோக்குமாருடன் நிரந்தர தொடர்பில் இருந்து உரிய விசாரணை நடத்தும்படியும், இந்த சம்பவத்தை சாதாரணமாக கருதாமல் தீவிரமாக எடுத்து கொண்டு பணியாற்ற ஒவ்வொரு போலீசாருக்கும் அறிவுறுத்தும்படியும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்

குறிப்பாக குண்டுவெடிப்பில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் பயங்கரவாதி பற்றிய ஒவ்வொரு தகவல்களையும் திரட்டும்படியும், அதுபற்றி தனக்கு உடனுக்குடன் தெரிவிக்கும்படியும் டி.ஜி.பி. பிரவீன் சூட்டுக்கு முதல்-மந்திரி அறிவுறுத்தி உள்ளார்.

பயங்கரவாதிக்கு பின்னால் இருக்கும் நபர்கள் யார்?, குண்டுவெடிப்பின் முக்கிய நோக்கம் என்ன? என்பது குறித்த அனைத்து தகவல்களை திரட்டுவதுடன், பல்வேறு கோணங்களில் விசாரணையை மேற்கொள்ளும்படியும் டி.ஜி.பி. பிரவீன் சூட்டுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story