மராட்டிய சிறைகளில் கைதிகளை கண்காணிக்க ஆளில்லா விமானங்கள்; நாட்டில் 2-வது மாநிலம்


மராட்டிய சிறைகளில் கைதிகளை கண்காணிக்க ஆளில்லா விமானங்கள்; நாட்டில் 2-வது மாநிலம்
x

மராட்டியத்தில் உள்ள சிறைகளில் கைதிகளின் பாதுகாப்பு, கண்காணிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக ஆளில்லா விமானங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

புனே,

நாட்டில் சிறைகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றை பலப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, முதன்முறையாக உத்தர பிரதேசத்தில் உள்ள சிறைகளின் பாதுகாப்புக்காக ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில், பா.ஜ.க. ஆளும் மற்றொரு மாநிலம் ஆன மராட்டியத்திலும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. உத்தர பிரதேசத்திற்கு அடுத்து இந்த வசதியை பெறும் 2-வது மாநிலம் ஆகும்.

இதன்படி, முதல் கட்டத்தில் எர்வாடா, கோலாப்பூர், நாசிக், சம்பாஜி நகர், தானே, அமராவதி, நாக்பூர், கல்யாண் மற்றும் சந்திரப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து இந்த நடைமுறை தொடங்க உள்ளது.

இதுபற்றி சிறை துறையின் ஏ.டி.ஜி.பி. அமிதாப் குப்தா செய்தியாளர்களிடம் கூறும்போது, சிறைகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுத்து, இந்த ஆளில்லா விமானங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சிறைகளில் கைதிகளின் நடவடிக்கைகள் மற்றும் அவர்களுக்கு என்னென்ன நடக்கின்றன என்பது பற்றி கண்காணிக்கும் நோக்கிலும், அவர்களுடைய பாதுகாப்பை கவனத்தில் கொண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

வெவ்வேறு சிறைகளில் பதற்றமுள்ள பகுதிகளில் இவற்றை கொண்டு கண்காணிக்கும் பணி நடைபெறும். இவற்றில் இரவு நேரத்திலும் செயல்பட கூடிய திறன் வாய்ந்த கேமிராக்களும் கொண்டு அவை செயல்படுவது கூடுதலாக கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உதவும் என கூறியுள்ளார்.


Next Story