சிக்கமகளூருவில் கனமழையால் ரூ.391 கோடிக்கு பாதிப்பு
சிக்கமகளூரு மாவட்டத்தில் மழை வெள்ள சேதங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். மேலும் மாவட்டத்தில் கனமழையால் ரூ.391 கோடிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கலெக்டர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
சிக்கமகளூரு;
மத்திய குழுவினர் ஆய்வு
கர்நாடகத்தில் கடந்த சில தினங்களாக இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த தொடர் கனமழை காரணமாக பல பகுதிகளில் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டுள்ளது. இதேபோல், சிக்கமகளூரு மாவட்டத்திலும் பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் பல இடங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகி உள்ளன.
இந்த நிலையில் சிக்கமகளூரு மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். சிருங்கேரி தாலுகா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை வெள்ள சேதங்களை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது கலெக்டர் ரமேஷ், ராஜேகவுடா எம்.எல்.ஏ. ஆகியோர் இருந்தனர்.
ரூ.391 கோடிக்கு பாதிப்பு
மேலும் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து கலெக்டர் ரமேசிடம் மத்திய குழுவினர் கேட்டறிந்து கொண்டனர். இதையடுத்து சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினர் கலெக்டர் ரமேஷ் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து மாவட்ட கலெகடர் ரமேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிக்கமகளூரு மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை ரூ.391 கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 90 வீடுகள் முழுமையாகவும், 386 வீடுகள் பகுதியாகவும் சேதம் அடைந்துள்ளது. கனமழைக்கு மாவட்டத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். 1,550 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை பழுதாகி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.