தத்தா ஜெயந்தி விழா கோலாகலம்
பாபாபுடன் கிரியில் உள்ள தத்தா பீடத்தில் நேற்று தத்தா ஜெயந்தி விழா கோலாகலமாக நடந்தது. இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிறப்பு பூஜை செய்தனர்.
சிக்கமகளூரு:-
பாபாபுடன்கிரி கோவில்
சிக்கமகளூர் மாவட்டம் சந்திரதிரிகோண மலையில் பாபாபுடன்கிரி பகுதியில் தத்தா கோவில் உள்ளது. இங்கு இந்து மற்றும் முஸ்லிம் மக்கள் வழிபாடு நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இரு தரப்பினரும் தத்தா கோவிலை சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தத்தா கோவில் விவகாரம் குறித்து மாநில அரசுதான் முடிவு எடுக்கவேண்டும் என்று கூறிவிட்டது. இதையடுத்து கர்நாடக மாநில அரசு தத்தா கோவிலை நிர்வகிக்க 8 பேர் கொண்ட குழுவை நியமித்தது. மேலும் 2 அர்ச்சகரையும் நியமித்தது. இந்நிலையில் கடந்த 6-ந் தேதி தத்தா ஜெயந்தி விழா தொடங்கியது. முதல் நாளான செவ்வாய்க்கிழமை அனுசியா ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பெண் பக்தர்கள் காவி உடை மற்றும் தலைப்பாகை அணிந்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக தத்தா பீடத்தில் பூஜை செய்து வழிப்பட்டனர்.
தத்தா ஜெயந்தி
இதையடுத்து 2-வது நாளான நேற்று முன்தினம் சோபா யாத்திரை நடந்தது. இதில் ஏராளமான இந்து அமைப்பினர் காவி உடை அணிந்து கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத்தை சீர்குலைக்க சிலர் சாலைகளில் ஆணிகளை போட்டிருந்தனர். போலீசார் அதை அப்புறப்படுத்தியதுடன் அசம்பாவிதங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டிருந்தனர். சுமார் 4500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இறுதி நாளான நேற்று தத்தா ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி காமதேனு கணபதி கோவில் வளாகத்தில் கூடிய 30 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் காவி உடையுடன் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக சந்திர திரிகோண மலைக்கு சென்றனர். இந்த ஊர்வலத்தில் பல்வேறு கலை குழுவினர் கலந்து கொண்டனர். இந்த கலை குழுவினர் மேள வாத்தியங்கள் முழங்க ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் அரிசி மற்றும் பருப்பு, வெல்லம் போன்ற பிரசாரதங்களை கொண்டு தத்தா பாதத்தில் வைத்து பூஜை ெசய்து வழிப்பட்டனர்.
சிறப்பு யாகம்
கடந்த ஆண்டை போன்று இந்த முறை வழக்கமாக நடைபெறும் இடத்தில் யாகம் நடைபெறவில்லை. அங்கு சிலர் அசைவ உணவு சமைத்து சாப்பிட்டதால், வேறு இடத்தில் யாகம் வளர்க்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியதும், தத்தா கோவில் அருகே யாக பூஜை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்த யாக பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்ததுடன், தத்தாவின் பாதத்தையும் வழிப்பட்டனர். இதற்கிடையில் இருமூடி கட்டி விரதம் இருந்த சி.டி.ரவி எம்.எல்.ஏ நேற்று நூற்றுக்கும் அதிகமான பக்தர்களுடன் அத்திகுந்தி அருகேயுள்ள ஒன்னமன் அருவி வரைக்கு வாகனத்தில் வந்தார். பின்னர் அங்கிருந்து பாதயாத்திரையாக சென்ற அவர் சுமார் 8 கி.மீ நடந்து தத்தா கோவிலுக்கு வந்தார். அங்கு தத்தா பாதை வழிப்பட்ட அவர் சிறப்பு யாக பூஜையிலும் கலந்து கொண்டார். இவருடன் மாவட்ட பொறுப்பு மந்திரி பைரதி பசவராஜ் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த யாக பூஜை கலந்து கொண்டு தத்தா பீடத்தை தரிசனம் செய்தனர்.
அர்ச்சகர்கள் பூஜை
இதில் புதிதாக நியமிக்கப்பட்ட 2 அர்ச்சகர்கள் கலந்து கொண்டு பூஜை செய்தனர். இதையடுத்து மாலையில் வழக்கமான பூஜையுடன் தத்தா ஜெயந்தி விழா நிறைவடைந்தது. இந்த தத்தா ஜெயந்தியையொட்டி, இதுவரை இல்லாத அளவிற்கு போலீசார் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.