17-ந் தேதி தொடங்குகிறது பிரதமர் மோடி பெற்ற பரிசு பொருட்கள் ஏலம்
பிரதமர் மோடி பெற்ற 1,200-க்கு மேற்பட்ட பரிசு பொருட்கள், 17-ந் தேதி முதல் ஏலம் விடப்படுகின்றன.
புதுடெல்லி,
பிரதமர் மோடி பெற்ற 1,200-க்கு மேற்பட்ட பரிசு பொருட்கள், 17-ந் தேதி முதல் ஏலம் விடப்படுகின்றன. அதில் கிடைக்கும் பணம், கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு பயன்படுத்தப்படும்.
பிரதமர் மோடியை சந்திக்கும் முதல்-மந்திரிகள், அரசியல் தலைவர்கள், பல்வேறு துறை பிரபலங்கள் பரிசு பொருட்கள் வழங்குவது வழக்கம். அந்த பரிசு பொருட்கள் அவ்வப்போது ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படுகின்றன.
ஏற்கனவே 3 தடவை ஆன்லைன் மூலம் ஏலம் நடந்துள்ளது. இந்தநிலையில், 4-வது தடவையாக, வருகிற 17-ந் தேதி ஏலம் தொடங்குகிறது.
1,200-க்கு மேற்பட்ட பரிசு பொருட்கள் ஏலம் விடப்படுகின்றன. டெல்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடத்தில் இந்த பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
பிரத்யேக இணையதளம் ஒன்றின் வழியாக ஏலம் நடக்கிறது. அக்டோபர் 2-ந் தேதி ஏலம் முடிவடைகிறது.
பரிசு பொருட்களின் ஆரம்ப விலை ரூ.100 முதல் ரூ.10 லட்சம்வரை இருக்கிறது. இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் பணம், கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
இப்பொருட்களில் சாமானியர் ஒருவர் அளித்த பரிசுப்பொருளும் இருக்கிறது. நாட்டின் வளமான கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றை பிரதிபலிக்கக்கூடிய பொருட்கள் உள்ளன.
மத்தியபிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் பரிசளித்த ராணி கமலாபாதி சிலை, உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பரிசளித்த அனுமன் சிலை மற்றும் சூரியன் ஓவியம், இமாசலபிரதேச மாநில முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் பரிசளித்த திரிசூலம், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் அளித்த கோல்ஹாபூர் மகாலட்சுமி கடவுள் சிலை, ஆந்திர முதல்-மந்திரி அளித்த ஏழுமலையான் படம் ஆகியவையும் பரிசு பொருட்களில் அடங்கும்.
டி-சர்ட், குத்துச்சண்டை கையுறைகள், ஈட்டி, பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள் கையெழுத்திட்ட டென்னிஸ் மட்டை உள்ளிட்ட விளையாட்டு பொருட்கள், ஓவியங்கள், சிற்பங்கள், கைவினை பொருட்கள், பாரம்பரிய அங்கவஸ்திரம், சால்வை, தலைப்பாகை, வாள் ஆகியவையும் உள்ளன.
அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலின் மாதிரி வடிவம், காசி விஸ்வநாதர் கோவில் மாதிரி வடிவம் ஆகியவையும் ஏலம் விடப்படுகின்றன.