ஒரு வாரத்திற்கு பிறகு குடகு, சுள்ளியாவில் மீண்டும் நிலநடுக்கம்; பொதுமக்கள் பீதி


ஒரு வாரத்திற்கு பிறகு குடகு, சுள்ளியாவில் மீண்டும் நிலநடுக்கம்;  பொதுமக்கள் பீதி
x

ஒரு வாரத்திற்கு பிறகு குடகு, சுள்ளியாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

மங்களூரு;

பாத்திரங்கள் உருண்டன

கர்நாடகத்தில் தட்சிண கன்னடா, குடகு போன்ற மாவட்டங்களில் பல பகுதிகளில் கடந்த 10 நாட்களாக அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. தட்சிண கன்னடாவில் சுள்ளியா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலஅதிர்வு தீவிரமாக உணரப்பட்டது. கடந்த மாதம் ஜூன் 25-ந் தேதி சுள்ளியா பகுதிகளில் 3.5 ஆக ரிக்டர் அளவில் நிலஅதிர்வு பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் அந்த பகுதியில் இருந்த வீட்டின் ஒருபக்க சுவர் இடிந்து விழுந்தது. மேலும், பல பகுதிகளில் வீட்டில் இருந்த பாத்திரங்கள் உருண்டு ஓடின. சில வீட்டு சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. இதேபோல் குடகு மாவட்டத்திலும் பலபகுதிகளில் நிலஅதிர்வு உணரப்பட்டது. இதுகுறித்து கர்நாடக பேரிடர் மீட்பு குழு ஆய்வு நடத்தி வருகிறது.

இந்த நிலையில் தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகாவில் பலபகுதிகளில் நேற்று அதிகாலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதி மக்கள் தங்கள் உயிர்களை பாதுகாக்க சாலையில் தஞ்சம் அடைந்தனர்.

சுள்ளியா தாலுகாவில் அரன்தொடு, தொடிகானா, குடகு மாவட்டத்தின் சம்பாஜே, செம்பு, கல்லபள்ளி பகுதிகளில் நிலஅதிர்வு தீவிரமாக உணரப்பட்டது. மேலும், பயங்கர சத்தத்துடன் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

பயங்கர சத்தம்

இதுகுறித்து சம்பங்கி கிராம பஞ்சாயத்து தலைவர் ஹமித் கூறுகையில், அதிகாலையில் பயங்கர சத்தத்துடன் நிலஅதிர்வு ஏற்பட்டது. சில வீடுகளில் சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சுள்ளியா தாலுகாவில் ஏற்பட்ட நிலநடுக்கம், தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் லேசான நிலஅதிர்வு காணப்பட்டது. நிலநடுக்கம் குறித்து கர்நாடக மாநில பேரிடர் மீட்பு குழுவுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

சுள்ளியா தாலுகாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் குறித்து, தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் நிலநடுக்க நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அவர்கள் கண்காணிப்பு பணியை தீவிரபடுத்தி வருகின்றனர்.


Next Story