ரியல் எஸ்டேட் நிறுவன அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை


ரியல் எஸ்டேட் நிறுவன அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
x

பெங்களூருவில் ரியல்எஸ்டேட் நிறுவன அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். முக்கிய ஆவணங்கள் அதிகாரிகளுக்கு சிக்கி இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு:

பெங்களூருவில் ரியல்எஸ்டேட் நிறுவன அலுவலகங்களில்அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். முக்கிய ஆவணங்கள் அதிகாரிகளுக்கு சிக்கி இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

முறைகேடு புகார்

பெங்களூருவில் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம், மான்யதா ரியல் எஸ்டேட் நிறுவனம். பெங்களூரு ரிச்மவுண்ட் ரோட்டில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்திற்கு, மான்யதா புராஜெக்ட் பிரைவேட் லிமிடெட், மான்யதா புரோமோட்டார்ஸ், ரெட்டி வீரண்ணா இன்வெஸ்மென்ட், ரெட்டி வீரண்ணா கட்டுமான நிறுவனம், மான்யதா டெவலப்பர்ஸ், மான்யதா இன்பிராஸ்ெடச்சர்ஸ் டெவலப்மென்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன.

இந்த நிலையில் இந்த ரியல்எஸ்டேட் நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், சட்டவிரோதமாக பணம் சம்பாதித்து இருப்பதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

அமலாக்கத்துறை அதிரடி சோதனை

இந்த நிலையில், பெங்களூரு ரிச்மவுண்ட் ரோட்டில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பிற அலுவலகங்களில் நேற்று ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனை நேற்று அதிகாலையில் இருந்து இரவு வரை நடந்தது. மேலும் அலுவலகங்களில் இருந்த அதிகாரிகள், ஊழியர்களிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி தகவல்களையும் பெற்றுக் கொண்டனர்.

மேலும் சதாசிவ நகரில் அந்த நிறுவனத்தின் இயக்குனரின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். வீட்டில் இருந்தவர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அங்கு ஆவணங்கள், சொத்து ஆவணங்கள், வங்கி கணக்குகளை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த சோதனையில் அதிகாரிகளுக்கு சில முக்கிய ஆவணங்கள் சிக்கின.

முக்கிய ஆவணங்கள் சிக்கியது

அதே நேரத்தில் ரியல்எஸ்டேட் நிறுவனத்தில் உள்ள ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் பரிசீலனை நடத்தினார்கள். அப்போது அந்த நிறுவனம் சட்டவிரோத பண பரிமாற்றம் மற்றும் முறைகேடாக பல கோடி ரூபாய் சம்பாதித்து இருப்பது பற்றி அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, ரியல்எஸ்டேட் நிறுவனத்தின் அலுவலகங்களில் இருந்த முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து சென்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சோதனை தொடர்பாக ரியல்எஸ்டேட் நிறுவன அதிபர்களிடம் விசாரணை நடத்தவும் அமலாக்கத்துறையினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

பரபரப்பு

ஒரே நேரத்தில் நேற்று பெங்களூருவில் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவன அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story