தாய்மொழியில் கல்வி கற்பது நகரம், மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு சம வாய்ப்பு அளிக்கிறது - ஜனாதிபதி திரவுபதி முர்மு


தாய்மொழியில் கல்வி கற்பது நகரம், மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு சம வாய்ப்பு அளிக்கிறது  - ஜனாதிபதி திரவுபதி முர்மு
x

நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்களை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார்.

புவனேஸ்வர் ,

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ஜெயதேவ் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்களை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் கூறியுள்ளதாவது: கல்வி என்பது அதிகாரமளிப்பதற்கான ஒரு கருவி. நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு மட்டத்திலும் கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பாரபட்சமின்றி அனைவருக்கும் கல்வி கிடைக்க முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். அனைவருக்கும் எளிதாக கல்வி கிடைக்கும் வகையிலான மத்திய அரசின் திட்டங்கள் பாராட்டத்தக்கவை.

தொழில்நுட்பக் கல்வியை ஆங்கிலத்தில் புரிந்து கொள்ள ஏராளமான மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். இதனால்தான் தேசியக் கல்விக் கொள்கையில் தொழில்நுட்பக் கல்வியை மாநில மொழிகளில் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு தாய்மொழி உதவுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. தாய்மொழியில் கல்வி கற்பதே மாணவர்களிடையே ஆக்கப்பூர்வ சிந்தனையை உருவாக்கும், பகுப்பாய்வுத் திறனை மேம்படுத்தும். இது நகரம் மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு சமமான வாய்ப்புகளை வழங்கும். மாநில மொழிகளில் பாடநூல்கள் கிடைக்காததன் காரணமாக முந்தைய காலத்தில் தொழில்நுட்பக் கல்வியை பயிற்றுவிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டன. இந்த சிரமத்தை நீக்குவதில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் முயற்சிகள் பாராட்டத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story