வாழ்வில் சாதிப்பதற்கு கல்வி முக்கியமானது- கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு
வாழ்வில் சாதிப்பதற்கு கல்வி முக்கியமானது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: பெங்களூருவில் இன்று ஒரு தனியார் பல்கலைக்கழக விழா நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:- நாம் எப்போதும் வேர்களை மறக்க கூடாது. வெற்றியை விட சாதிப்பது முக்கியம். உங்களின் வெற்றியால் பலர் பயனடைய வேண்டும். அதுவே சாதனை ஆகும். சாதனையாளருக்கு சாவு இறுதி கிடையாது. இறப்புக்கு பிறகும் வாழ்பவர் சாதனையாளர். நமது வாழ்க்கையை பயனுள்ள வகையில் வாழ்ந்தால் நாம் இல்லாதபோதும் மக்கள் நம்மை நினைத்து கொள்வார்கள். அதனால் பொதுமக்கள் தங்களால் முடிந்த உதவிகளை இயலாதோருக்கு செய்ய வேண்டும். சமுதாயத்தில் சாதிக்க கடுயைமாக உழைக்க வேண்டும். இதன் மூலம் இந்த சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும்.
சாதிக்க துடிப்பவர்களுக்கு உதவ வேண்டும். வாழ்வில் சாதிப்பதற்கு கல்வி முக்கியமானது. அனைவரும் கல்வி கற்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் கல்வியை கைவிட கூடாது. கல்வி கற்றால் சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வர முடியும். இதை அனைவரும் உணர வேண்டும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.