திரிபுராவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த ரோகிங்கியா அகதிகள் 8 பேர் கைது


திரிபுராவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த ரோகிங்கியா அகதிகள் 8 பேர் கைது
x

ரோகிங்கியா அகதிகள் திரிபுராவில் இருந்து ரெயில் மூலம் டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தனர்.

அகர்தலா,

மியான்மரியில் உள்நாட்டு போரின் போது லட்சக்கணக்கான ரோகிங்கியா இஸ்லாமிய மதத்தினர் அகதிகளாக மாறினர். மியான்மரில் இருந்து வெளியேறி ரோகிங்கியாக்கள் அண்டை நாடான வங்காளதேசத்தில் தஞ்சமடைந்தனர்.

பின்னர், வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக வடகிழக்கு மாநில எல்லைகள் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து போலி அடையாளங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு இந்தியாவில் சட்டவிரோதமாக வாழ்ந்து வரும் ரோகிங்கியாக்களை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திரிபுரா மாநிலம் அகர்தலா நகரில் ரோகிங்கியாக்கள் சட்டவிரோதமாக வசித்து வருவதாக ராணுவ உளவுத்துறை மூலம் திரிபுரா மாநில போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலை தொடர்ந்து நேற்று அதிரடி சோதனை நடத்திய போலீசார் அகர்தலா ரெயில் நிலையத்தில் 8 ரோகிங்கியா அகதிகளை கைது செய்தனர்.

முகமது யுசப் (வயது 23), அவரது மனைவி மினரா (வயது 30), சயது நூர் (வயது 25), அவரது மனைவி சாஹத் அரா (வயது 21), ஜனத் அரா (வயது 20), 3 குழந்தைகள் என மொத்தம் 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் வங்காளதேசத்தில் இருந்து ஏஜெண்ட்கள் மூலம் சட்டவிரோதமாக திரிபுரா எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர். திரிபுரா நுழைந்த 8 பேரும் டெல்லி செல்ல திட்டமிட்டு அதற்காக ரெயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். டெல்லி செல்வதற்காக குடும்பத்துடன் அகர்தலா ரெயில் நிலையம் வந்த ரோகிங்கியா அகதிகளை போலீசார் கைது செய்தனர்.


Next Story