'ஏக்னாத் ஷிண்டே குற்றவாளிகளை உருவாக்குகிறார்..' - சிவசேனா நிர்வாகியை துப்பாக்கியால் சுட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சு


ஏக்னாத் ஷிண்டே குற்றவாளிகளை உருவாக்குகிறார்.. - சிவசேனா நிர்வாகியை துப்பாக்கியால் சுட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 3 Feb 2024 8:36 AM GMT (Updated: 3 Feb 2024 8:49 AM GMT)

காவல் நிலையத்தில் தன் கண் முன்னே தனது மகன் தாக்கப்பட்டதாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. கண்பத் கெய்க்வாட் கூறியுள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் கல்யாண் தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. கண்பத் கெய்க்வாட். இவரது மகன் நேற்று இரவு உல்ஹாஸ் நகர் பகுதியில் உள்ள ஹில் லைன் காவல்நிலையத்தில் சிவசேனா கட்சி நிர்வாகி மகேஷ் கெய்க்வாட் என்ற நபர் மீது நிலத்தகராறு தொடர்பாக புகார் அளிப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது அங்கு மகேஷ் கெய்க்வாட் தனது கூட்டாளிகளுடன் காவல் நிலையத்திற்கு வந்து சேர்ந்துள்ளார். இதனிடையே பா.ஜ.க. எம்.எல்.ஏ. கண்பத் கெய்க்வாட்டும் காவல் நிலையத்திற்கு வரவே, அங்கு இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், எம்.எல்.ஏ. கண்பத் கெய்க்வாட் திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து மகேஷ் கெய்க்வாட் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த தாக்குதலில் காயமடைந்த மகேஷ் கெய்க்வாட் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்க்சிச்சூடு நடத்திய கண்பத் கெய்க்வாட் எம்.எல்.ஏ.வை போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக கைது செய்யப்படுவதற்கு முன்பு கண்பத் கெய்க்வாட் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நான்தான் துப்பாகியால் சுட்டேன். எனக்கு எந்த வருத்தமும் இல்லை. காவல் நிலையத்திற்குள்ளேயே என் மகனை போலீசார் முன்னிலையில் தாக்கினால் நான் என்ன செய்வேன்?

மராட்டிய மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே, குற்றவாளிகளின் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வருகிறார். அவர் முதல்-மந்திரியாக இருந்தால் மராட்டிய மாநிலத்தில் குற்றவாளிகள்தான் பிறப்பார்கள். என்னைப் போன்ற ஒரு நல்லவனை அவர் இன்று குற்றவாளியாக்கி விட்டார்" என்று தெரிவித்தார்.


Next Story