அவுரங்காபாத், ஒஸ்மனாபாத் நகரங்களின் பெயரை மாற்ற மராட்டிய அரசு ஒப்புதல்
அவுரங்காபாத், ஒஸ்மனாபாத் நகரங்களின் பெயரை மாற்ற ஏக்நாத் ஷிண்டே - தேவேந்திர பட்னாவிஸ் அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான மகாவிகாஸ் கூட்டணி ஆட்சி நடந்தது. இந்தநிலையில் கடந்த மாதம் 20-ந் தேதி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனாவை சேர்ந்த 40 எம்.எல்.ஏ.க்கள் கட்சி தலைமைக்கு எதிராக திரும்பினர். இந்தநிலையில் கவர்னர் உத்தவ் தாக்கரேயை பெரும்பான்மையை நிருபிக்க உத்தரவிட்டார். இதற்கிடையே கடந்த மாதம் 29-ந் தேதி நடந்த மந்திரி சபை கூட்டத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு அவுரங்காபாத்தின் பெயரை சம்பாஜிநகர் எனவும், ஒஸ்மனாபாத்தை தாராசிவ் என மாற்ற ஒப்புதல் அளித்தது. இதேபோல நவிமும்பை விமானநிலையத்துக்கு டி.பி. பாட்டீல் பெயரை வைக்கவும் ஒப்புதல் அளித்து இருந்தது.
இந்தநிலையில் 30-ந் தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்ற ஏக்நாத்ஷிண்டே, கவர்னர் பெரும்பான்மையை நிருபிக்க உத்தரவிட்டபிறகு நடத்தப்பட்ட மந்திரிசபையில் நகரங்கள் பெயர் மாற்றம் தொடர்பாக எடுக்க முடிவுகள் சட்டவிரோதமானது என கூறியிருந்தார்.
இந்தநிலையில் நே ஏக்நாத்ஷிண்டே - தேவேந்திர பட்னாவிஸ் அடங்கிய மந்திரி சபை அவுரங்காபாத்தை - சத்ரபதி சம்பாஜிநகர் என மாற்றவும், ஒஸ்மனாபாத்தை - தாராசிவ் என மாற்றவும் ஒப்புதல் வழங்கியது. இதேபோல நவிமும்பை விமான நிலையத்துக்கு டி.பி.பாட்டீல் பெயரை வைக்கவும் ஒப்புதல் வழங்கினர். இதுகுறித்து முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்ட தகவலில், 2 நகரங்களின் பெயரை மாற்றுவது தொடர்பாக மந்திரி சபைவழங்கி ஒப்புதல், மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது.