தேர்தல் ஆணையம் உத்தரவு:மராட்டியத்தை வைத்து பார்த்தால் அப்ப எடப்பாடிக்கு தானா அ.தி.மு.க...! ஓபிஎஸ் நிலை...?


தேர்தல் ஆணையம் உத்தரவு:மராட்டியத்தை வைத்து பார்த்தால் அப்ப எடப்பாடிக்கு தானா அ.தி.மு.க...!  ஓபிஎஸ் நிலை...?
x

மராட்டியத்தில் ஏக்நாத் ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்தது.

புதுடெல்லி

மராட்டியத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே, முதல்-மந்திரி பதவி வகித்த உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திடீர் போர்க்கொடி தூக்கினார்.

உத்தவ் தாக்கரே இந்துத்வா கொள்கையை கைவிட்டதால் அவருக்கு எதிராக திரும்பியதாக ஏக்நாத் ஷிண்டே குற்றச்சாட்டை முன்வைத்தார். அவருக்கு சிவசேனாவின் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்ததால், அந்த கட்சி 2 ஆக உடைந்தது.

சிவசேனா கட்சியின் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேயை ஆதரித்தனர். இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டே தரப்பு தாங்கள் தான் உண்மையான சிவசேனா என இந்திய தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர்.

உத்தவ் தாக்கரே தரப்பு நாங்கள் தான் உண்மையான சிவசேனா என வாதிட்டது.

பலத்தை காட்டிய அணிகள் தேர்தல் ஆணையத்தில் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்பதை நிரூபிக்க ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் கட்சியின் மொத்த எம்.எல்.ஏ.க்கள் 55 பேரில் 40 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மொத்தம் உள்ள 18 எம்.பி.க்களில் 13 பேரின் ஆதரவு கடிதத்தை கொடுத்தனர்.

மேலும் சுமார் 2 லட்சம் உறுப்பினர்கள், நிர்வாகிகள் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர். உத்தவ் தாக்கரே தரப்பு 15 எம்.எல்.ஏ.க்கள், 5 எம்.பி.க்கள் மற்றும் 8 லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள், 2 லட்சத்துக்கும் அதிகமான நிர்வாகிகள் பிரமாண பத்திரங்களையும் தாக்கல் செய்தது.

இந்தநிலையில் நேற்று நடந்த பரபரப்பு திருப்பத்தில் ஏக்நாத் ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்தது.

தேர்தல் ஆணையம் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சிவசேனா கட்சி பெயரையும், அந்த கட்சியின் 'வில்-அம்பு' சின்னத்தையும் வழங்கியது.

ஏக்நாத் ஷிண்டேவுக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆதரவு இருப்பதை அடிப்படையாக வைத்து அவர்கள் தான் உண்மையான சிவசேனா என அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் பிறப்பித்து உள்ள உத்தரவில், "2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் பெற்ற வாக்குகளில் 76 சதவீதம் ஓட்டுகளை ஏக்நாத்ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பெற்று உள்ளனர்.

உத்தவ் தாக்கரே ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 23.5 சதவீதம் ஓட்டுகள் பெற்று உள்ளனர்" என கூறியுள்ளது. இதற்கிடையே மராட்டியத்தில் 2 சட்டசபை தொகுதிகளுக்கு வருகிற 26-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த இடைத்தேர்தல் வரை உத்தவ் தாக்கரே அணி தீப்பந்தம் சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. உத்தவ் தாக்கரேக்கு பின்னடைவு கட்சியின் பெயர், சின்னம் முதல்-மந்திரி ஷிண்டே அணிக்கு சென்று இருப்பது உத்தவ் தாக்கரே அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரேயின் தந்தை பால் தாக்கரேயால் 1966-ம் ஆண்டு தொடங்கப்பட்டு மராட்டியத்தில் கோலோச்சி வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாகவும், அப்போது வெற்றி எங்கள் கைவசம் வரும் என்றும் உத்தவ் தாக்கரே நம்பிக்கை தெரிவித்தார்.

தேர்தல் ஆணைய உத்தரவை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே வரவேற்று உள்ளார். இது பால்தாக்கரே ஆசியுடன் உண்மை மற்றும் மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த உத்தரவை வைத்து பார்த்தால் அ.தி.மு.க.வில் நிலவும் பிரச்சனைக்கு தேர்தல் ஆணையத்தின் இரட்டை இலை சின்னம், உண்மையான அ.தி.மு.க. தொடர்பாக ஏதேனும் உத்தரவு பிறப்பித்தால் அது எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

தற்போதைய சூழலில் ஓ பன்னீர் செல்வத்தை காட்டிலும், எடப்பாடி பழனிச்சாமியின் பக்கம் தான் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் அதிகம் உள்ளனர். இதனால் சிவசேனா கட்சி சந்தித்த நிலையை அதிமுக எட்டினால் அது ஓ பன்னீர் செல்வத்துக்கு பின்னடைவை ஏற்படுத்துவதோடு, எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.


Next Story