கோர்ட்டுகளை மக்கள் தேடி வரும் நிலை மாற வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி


கோர்ட்டுகளை மக்கள் தேடி வரும் நிலை மாற வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி
x

கோர்ட்டுகளை மக்கள் தேடி வரும் நிலை மாறி, மக்களை கோர்ட்டுகள் தேடிச்செல்லும் நிலை வர வேண்டும் என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார்.

மிகப்பெரும் சவால்

அரசியலமைப்பு தினத்தையொட்டி சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி, மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ, சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் மத்தியில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியா போன்ற பெரிதானதும், பன்முகத்தன்மையும் கொண்ட நாட்டில், நீதி வழங்கும் முறை ஒவ்வொருவருக்கும் சென்றடைவதை உறுதி செய்வது, நீதித்துறை ஒரு நிறுவனமாக சந்திக்கிற மிகப்பெரும் சவால் ஆகும். கோர்ட்டுகளை மறுவடிமைப்பு செய்வது முக்கியம் ஆகும்.

கோர்ட்டுகள் செயல்படும் விதத்தை மேம்படுத்துவதற்காக நீதித்துறை தொழில்நுட்பத்தை பின்பற்றுகிறது.

மக்களைத் தேடி கோர்ட்டுகள்...

பொதுமக்கள் நீதியைத் தேடி கோர்ட்டுக்கு செல்லும் நிலைக்கு பதிலாக கோர்ட்டுகள் மக்களைத் தேடிச்செல்லும் நிலை வர வேண்டும்.

நீதியை அணுகுவதில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்காக நிறுவனரீதியிலான சீர்திருத்தங்களுடன் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும். மேலும் வழக்கு நடைமுறைகளை எளிதாக்க வேண்டும். அவற்றை மக்களுக்கு ஏற்ற விதத்தில் மாற்றுவது அவசியம் ஆகும்.

கொரோனா பெருந்தொற்று நோயின்போது தொழில்நுட்பத்துடன் நீதித்துறையின் ஈடுபாடு பரவியிருந்தது. ஆனாலும், நாம் உள்கட்டமைப்பை அகற்றாமல், அதன்மீது கட்டமைக்க வேண்டும். தொழில்நுட்ப கட்டமைப்பை உறுதி செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகளைக் கேட்டுக்கொள்கிறேன்.

வழக்குகளை பட்டியலிடுவதில் தொழில்நுட்பம்...

வழக்குகளை பட்டியலிடுவதில், விசாரணைக்கு எடுப்பதில் நான் தொழில்நுட்பத்தை பின்பற்ற முயற்சி எடுக்கிறேன். இதனால் வழக்குகளை பட்டியலிடுவதில் நேருகிற தாமதம், விசாரணையில் நேருகிற தாமதம் நமது அகராதியில் இருந்து நீக்கப்படும்.

சுப்ரீம் கோர்ட்டு தற்போது கலப்பின மாதிரிபோல செயல்படுகிறது. எனவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வக்கீல்களும், மக்களும் நேரில் (இணையவழியில்) ஆஜராக முடிகிறது.

மக்கள் மீது கருணை உணர்வு...

சுப்ரீம் கோர்ட்டு டெல்லியில் திலக் மார்க்கில் இருந்தாலும், அது ஒட்டுமொத்த நாட்டுக்கும் சுப்ரீம் கோர்ட்டு ஆகும்.

நாடு முழுவதும் உள்ள நீதிபதிகள், நீதி, சமத்துவம், சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான அரசியல் சாசனத்தின் பார்வையை பிரதிபலிக்க வேண்டும்.

சட்டப்பணிகளில், நீதித்துறை பணிகளில் விளிம்பு நிலை மக்கள் மற்றும் பெண்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது முக்கியம் ஆகும்.

சில நேரங்களில் கனிவான சிறிய செயல்களால் மாற்றம் நடக்கும். சட்டத்தின் இதயமும், ஆன்மாவும், நமது கோர்ட்டுகளில் நிர்வகிக்கப்படுகின்றன. எனவே மக்கள் மீது நமக்கு கருணை உணர்வு வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story