கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி உயிருக்கு அச்சுறுத்தல்; 16 பேர் கைது
கர்நாடகாவின் முன்னாள் முதல்-மந்திரியான சித்தராமையாவின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்தில் 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடகாவின் முன்னாள் முதல்-மந்திரி மற்றும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் சித்தராமையா. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், சங்பரிவார் அமைப்பின் வீர் சாவர்க்கரை பற்றி பேசியதற்காக மிரட்டல் விடப்பட்டு உள்ளது.
கர்நாடகாவில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மடினாடு மற்றும் கோயனாடு ஆகிய பகுதிகளை பார்வையிட சென்ற சித்தராமையாவுக்கு எதிராக பா.ஜ.க.வினர் கோஷங்களை எழுப்பியபடியும், கருப்பு கொடி காட்டியும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். அவர், குடகு பகுதிக்கு சென்றபோதும் எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பா.ஜ.க.வினரின் இந்த எதிர்ப்பு போராட்டத்தில் சித்தராமையா சென்ற கார் மீது முட்டைகளும் வீசப்பட்டு உள்ளன என காங்கிரஸ் கூறியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் தொண்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து ஆளும் பா.ஜ.க.வின் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார். சம்பவத்தில் தொடர்புடைய 16 பேர் குடகு நகரில் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் 9 பேர் குஷால்நகர் பகுதியையும் மற்றும் 7 பேர் மடிகேரி பகுதியையும் சேர்ந்தவர்கள்.
அவர்கள் கோர்ட்டில் ஒப்படைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி சித்தராமையா கூறும்போது, பா.ஜ.க.வினர் ஆட்களை வாடகைக்கு அமர்த்தி தனக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட செய்கின்றனர் என கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபின்னர், இதற்காக அவர்களுக்கு பாடம் புகட்டுவோம் என்றும் சித்தராமையா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.