ராஜஸ்தானில் ரெயில்வே பாலத்தில் வெடிவிபத்து - உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு


ராஜஸ்தானில் ரெயில்வே பாலத்தில் வெடிவிபத்து - உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு
x
தினத்தந்தி 13 Nov 2022 1:30 PM GMT (Updated: 14 Nov 2022 2:51 AM GMT)

ஓடா ரெயில் பாலத்தில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

ஆமதாபாத்,

ராஜஸ்தானில் உதய்பூர் மற்றும் ஆமதாபாத் இடையே புதிய ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக்டோபர் 31ஆம் தேதி திறந்து வைத்தார். நேரடி இணைப்பு மூலம் பயண நேரம் 10 மணி நேரத்திலிருந்து 5 மணி நேரமாக குறைந்துள்ளது.

உதய்பூரிலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள சாலம்பர் சாலையில் உள்ள ஓடா ரெயில் பாலத்தில் நேற்று இரவு 10 மணியளவில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பயங்கர சத்தம் கேட்டதால், உடனே பொதுமக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அந்த வழியாக செல்லும் அனைத்து ரெயில்களையும் மாற்றுப்பாதைகளில் ரெயில்வே திருப்பி அனுப்பியது.

இந்த பாலத்தை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தகர்க்க முயன்றதாக கூறப்படுகிறது. ​​பல இடங்களில் ரயில் தண்டவாளம் உடைந்து காணப்பட்டது. ரயில் பாதையில் வெடிமருந்து கண்டெடுக்கப்பட்டது. பாலத்தின் நட் போல்ட்களும் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது.

13 நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட உதய்பூர்-ஆமதாபாத் ரெயில் பாதையில் கட்டப்பட்ட ரெயில் பாலத்தில் பெரும் வெடிவிபத்து ஏற்பட்ட சம்பவம் சுற்றுவட்டார மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

போலீசாரின் விசாரணையில், இதற்கு டெட்டனேட்டர் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. பயங்கரவாதச் சம்பவம் நடக்க வாய்ப்புள்ளதால், பயங்கரவாத எதிர்ப்புப் படையும் (ஏடிஎஸ்) சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளது. தற்போது ரெயில் பாலம் மூடப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையும் தொடங்கியுள்ளது. சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.


Next Story