கேரளாவில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து - ரெயில் சேவை பாதிப்பு


கேரளாவில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து - ரெயில் சேவை பாதிப்பு
x

இந்த சம்பவத்தின்போது ரெயில் பெட்டிகளில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

கண்ணூர்,

கண்ணூர்-ஆலப்புழா விரைவு ரெயில் கேரளா மாநிலம் கண்ணூர் ரெயில் நிலையம் அருகே பரகண்டி பகுதியில் தடம் மாற்றம் செய்ய சென்றது. தடம் மாற்றத்திற்கு பிறகு கண்ணூர் ரெயில் நிலையத்தின் முதல் நடைமேடைக்கு இன்று அதிகாலை கொண்டு வரப்பட்டபோது ரெயிலின் கடைசி 2 பெட்டிகள் தடம் புரண்டன. தடம் புரண்ட பெட்டிகள் ரெயில் நிலையத்தின் சிக்னலை சேதப்படுத்தின.

இந்த சம்பவத்தின்போது ரெயில் பெட்டிகளில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். தகவல் அறிந்து ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கடும் போராட்டத்திற்கு பிறகு கடைசி 2 பெட்டிகளை ரெயில்வே ஊழியர்கள் பிரித்து எடுத்தனர். காலை 5.10 மணிக்கு புறப்பட வேண்டிய கண்ணூர்-ஆலப்புழா விரைவு ரெயில் ஒன்றரை மணி நேரம் தாமதத்திற்கு பின்னர் காலை 6.43 மணிக்கு கண்ணூர் ரெயில் நிலையத்திலிருந்து பயணிகளுடன் புறப்பட்டது.

இந்த விபத்து காரணமாக அந்த வழியில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 More update

Next Story