குடும்ப பிரச்சினை; 4 பச்சிளம் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்; குழந்தைகள் உயிரிழப்பு


குடும்ப பிரச்சினை; 4 பச்சிளம் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்; குழந்தைகள் உயிரிழப்பு
x
தினத்தந்தி 6 Aug 2022 7:18 AM GMT (Updated: 2022-08-06T13:16:59+05:30)

குடும்ப பிரச்சினை காரணமாக 4 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் குழந்தைகள் உயிரிழந்தன.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் மங்களியவாஸ் பகுதி ஜிகல்புரா கொலா கிராமத்தை சேர்ந்த விவசாயி பொத்ராம். இவரது மனைவி மதினா (வயது 32). இந்த தம்பதிக்கு கோமல் (வயது 4), ரிங்கு (வயது 3), ராஜ்வீர் (வயது 2), தேவ்ராஜ் (பிறந்து 1 மாதம்) என 4 குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில், மதினாவுக்கும் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் இடையே பிரச்சினை நிலவி வந்துள்ளது. இதனால், மதினாவுக்கும் அவரது கணவர் குடும்பத்தினருக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மதினா தனது 4 குழந்தைகளை அழைத்துக்கொண்டு கிராமத்திற்கு அருகே உள்ள ஆட்நடமாட்டம் அற்ற பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு உள்ள பாழடைந்த கிணற்றுக்குள் தனது 4 குழந்தைகளையும் வீசிய மதினா தானும் கிணற்றுக்குள் குதித்துள்ளார்.

குழந்தைகளும், மதினாவும் வீட்டில் இல்லாதத்தை அறிந்த அக்கம்பக்கத்தினரும், உறவினர்களும் கிராமம் முழுவதும் தேடியுள்ளனர். கிராமத்திற்கு வெளியே இருந்த கிணற்றுக்குள் பார்த்தபோது குழந்தைகளுடன் மதினா கிணற்றுக்குள் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், 5 பேரையும் ஊர் மக்கள் கிணற்றில் இருந்து வெளியே கொண்டுவந்தனர். ஆனால், கிணற்றில் தண்ணீருக்குள் மூழ்கிய 4 குழந்தைகளும் உயிரிழந்தனர். அதேவேளை, குழந்தைகளின் மதினா உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story