கள்ளக்காதலி கழுத்தை நெரித்து கொன்ற விவசாயி கைது
வேறொருவருடன் பழகியதால் ஆத்திரத்தில் கள்ளக்காதலியின் கழுத்தை நெரித்து கொலை செய்த விவசாயி கைது செய்யப்பட்டு உள்ளார்.
சிக்பள்ளாப்பூர்:
கள்ளக்காதல்
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளி தாலுகா சேலூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கோலபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 40). விவசாயி இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் வெங்கடேசுக்கும், கோலபள்ளி கிராமத்தில் வசித்து வந்த திருமணம் ஆன நரசம்மா (40) என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது.
இதனால் அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்து உள்ளனர். இந்த நிலையில் நரசம்மாவுக்கு அதே கிராமத்தை சேர்ந்த இன்னொருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அந்த நபருடன், நரசம்மா நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. இது வெங்கடேசுக்கு பிடிக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக நரசம்மா, வெங்கடேஷ் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.
கொலை-கைது
இந்த நிலையில் நேற்று கிராமத்தில் உள்ள தனது விவசாய நிலத்தில் நரசம்மா நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு சென்ற வெங்கடேஷ், நரசம்மாவிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் நரசம்மாவின் கழுத்தை நெரித்து வெங்கடேஷ் கொலை செய்தார். சம்பவம் பற்றி அறிந்ததும் சேலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நரசம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் வேறு ஒருவருடன் பழகியதால் நரசம்மாவை, வெங்கடேஷ் கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.