சிறையில் முதல் நாள்...!! கெஜ்ரிவாலுக்கான சிறப்பு சலுகைகள் என்ன?


சிறையில் முதல் நாள்...!! கெஜ்ரிவாலுக்கான சிறப்பு சலுகைகள் என்ன?
x
தினத்தந்தி 2 April 2024 5:13 AM GMT (Updated: 2 April 2024 7:14 AM GMT)

திகார் சிறையில் உள்ள கைதிகளுக்கு, தினசரி 2 வேளை, பருப்பு சாம்பார், சப்ஜி மற்றும் 5 ரொட்டிகள் அல்லது அரிசி சாதம் வழங்கப்படும்.

புதுடெல்லி,

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியா மற்றும் மந்திரியாக இருந்த சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு பின் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில், முக்கிய புள்ளியாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் டெல்லி முதல்-மந்திரி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

கடந்த 21-ந்தேதி அமலாக்கத்துறை குழுவினர் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். 2 மணிநேர சோதனை மற்றும் விசாரணைக்கு பின்னர், அமலாக்க பிரிவு அதிகாரிகள் கெஜ்ரிவாலை அன்றிரவு கைது செய்தனர். கெஜ்ரிவால் கைது நடவடிக்கைக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என ஆம் ஆத்மி தெரிவித்து உள்ளது. இந்த விசயத்தில், முதல்-மந்திரியாக இருக்கும்போது, ஒருவர் கைது செய்யப்படுவது என்பது முதல் முறையாகும்.

தொடர்ந்து, அமலாக்க துறை காவலில் இருந்து வந்த கெஜ்ரிவாலை, டெல்லி சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் அதிகாரிகள் நேற்று ஆஜர்படுத்தினர். அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவில்லை. விசாரணையை திசை திருப்ப முயல்கிறார். டிஜிட்டல் பாஸ்வேர்டுகளை தரமறுக்கிறார் என கூறினர்.

இதனால், அவரை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என்று அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை தொடர்ந்து அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி, டெல்லி சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, ஏப்ரல் 15-ந்தேதி வரை கெஜ்ரிவால் காவலில் வைக்கப்படுவார். இதனை தொடர்ந்து அதிகாரிகள் அவரை திகார் சிறைக்கு கொண்டு சென்றனர்.

பொதுவாக, திகார் சிறையில் உள்ள கைதிகளுக்கு, தினசரி 2 வேளை, பருப்பு சாம்பார், சப்ஜி மற்றும் 5 ரொட்டிகள் அல்லது அரிசி சாதம் வழங்கப்படும். இதுதவிர காலை மற்றும் மாலை என இரு வேளைகளில், ஒரு கோப்பை தேநீர் வழங்கப்படும்.

திகார் சிறையில், முதல்-மந்திரி என்ற அடிப்படையில் கெஜ்ரிவாலுக்கு என சலுகைகள் கிடைத்துள்ளன. கெஜ்ரிவால் நீரிழிவு நோயாளியாகவும் உள்ளார். இதனால், அவருக்கு வீட்டில் தயாரித்த உணவுகள், பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் தரப்படும். ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென குறைந்து விட்டால், சாப்பிடுவதற்காக உயர் வகை சாக்லேட்டுகளும் வழங்கப்படும்.

14 நாட்கள் திகார் சிறையில் இருக்கும் அவருக்கு, வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட படுக்கை விரிப்பு, தலையணைகள் மற்றும் உறைகள் ஆகியவை வழங்கப்படும். கெஜ்ரிவாலின் உடல்நிலையை கண்காணிக்க தேவையான மருத்துவ உபகரணங்களும் அவருக்கு தரப்படும்.

இதுதவிர, படிப்பதற்கு பகவத் கீதை, ராமாயண புத்தகங்களும் மற்றும் ஹவ் பிரைம் மினிஸ்டர்ஸ் டிசைட் என்ற, பத்திரிகையாளர் நீரஜா சவுத்ரி எழுதிய புத்தகம் ஒன்றும் வழங்கும்படி சிறை அதிகாரிகளிடம் கூறப்பட்டு உள்ளது. 14-க்கு 8 அடி பரப்பளவு கொண்ட சிறை எண் 2-ல் கெஜ்ரிவால் உள்ளார்.

இந்த காலகட்டத்தில், மனைவி சுனிதா கெஜ்ரிவால் அவரை சந்திக்க முடியும். சிறையில், காலையில் 6.30 மணியளவில் கைதிகள் எழுந்து விடுவர். காலை உணவாக ஒரு கோப்பை தேநீர் மற்றும் சில பிரட் துண்டுகள் கொடுக்கப்படும்.

இதன்பின்னர், காலை 10.30 மணி முதல் 11 மணிக்குள் மதிய உணவு இடைவேளை விடப்படும். இதன்பின்பு பிற்பகல் 3 மணி வரை சிறையில் அவர்களுடைய அறைகளில் அடைக்கப்படுவார்கள். 3 மணியளவில் ஒரு கோப்பை தேநீர் மற்றும் இரண்டு பிஸ்கெட்டுகள் கொடுக்கப்படும். மாலை 5.30 மணியளவில் இரவு உணவு கொடுக்கப்பட்டு, இரவு 7 மணியளவில் சிறை அறையில் அடைக்கப்படுவார்கள்.

சிறையில் சாப்பிடுவது உள்ளிட்ட நேரம் தவிர, கெஜ்ரிவாலுக்கு தொலைக்காட்சி பார்க்கும் வசதியும் உண்டு. அதில், 18 முதல் 20 சேனல்களை காணலாம். அவற்றில் செய்திகள், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு சேனல்களை தேர்ந்தெடுத்து பார்க்க முடியும்.

இவருடன், மணீஷ் சிசோடியா மற்றும் பாரத ராஷ்டீரிய சமிதியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகளான கவிதா ஆகியோரும் இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.


Next Story