அசாமை தொடர்ந்து, உத்தரகாண்டில் கொடூரம்... நிர்வாணப்படுத்தி, மதுகுடிக்க வைத்து ராகிங் கொடுமை


அசாமை தொடர்ந்து, உத்தரகாண்டில் கொடூரம்... நிர்வாணப்படுத்தி, மதுகுடிக்க வைத்து ராகிங் கொடுமை
x

அசாமை தொடர்ந்து, உத்தரகாண்டில் பல்கலைக்கழக மாணவரை நிர்வாணப்படுத்தி, மதுகுடிக்க வைத்து, வீடியோ எடுத்து சக மாணவர் உள்பட 3 பேர் ராகிங்கில் ஈடுபட்டு உள்ளனர்.



டேராடூன்,


நாட்டில் பல்கலை கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிலையங்களில் ராகிங்கை கட்டுப்படுத்த 2009-ம் ஆண்டு, பல்கலைக்கழக மானிய குழு சார்பில் ஒழுங்கு விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன. ராகிங்கை தடுக்க கடுமையான சட்டங்கள் நடைமுறையில் உள்ளபோதும், சமீப நாட்களாக ராகிங் கொடுமைகள் வடமாநிலங்களில் அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது.

அசாமில் திப்ரூகார் பல்கலை கழகத்தில் எம்.காம் படித்து வந்த ஆனந்த் சர்மா என்ற மாணவர் கடந்த 27-ந்தேதி விடுதியின் 2-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். பின்பு, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின் ஆனந்தின் உடல்நிலை தேறி வருகிறது. இந்த சம்பவத்தில் 21 மாணவர்களை பல்கலைக்கழக நிர்வாகம் சஸ்பெண்டு செய்துள்ளது. தீவிர விசாரணையில், கடந்த செப்டம்பர் முதல் ராகிங் கொடுமை நடந்தது தெரிய வந்துள்ளது.

இதுபற்றி பல்கலை கழகத்தின் உயரதிகாரிகளிடம் ஆனந்த், பல மூத்த மாணவர்களின் பெயர்களை குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளார். எனினும், இதனை மறைக்கும் முயற்சியில் பல்கலைக்கழக நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது என கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளதுடன், ராகிங்கை மறைக்கும் செயலில் அதிகாரிகள் ஈடுபட்டார்களா? என்பது பற்றி விசாரிக்கும்படி அசாம் போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளார்.

ராகிங் போன்ற விசயங்களில் பூஜ்ய சகிப்பு தன்மை கொள்கையை அரசு கொண்டுள்ளது என கூறிய அவர், அதிகாரிகளின் பக்கம் தவறு இருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை பாயும் என எச்சரித்து உள்ளார். அசாமில் ராகிங் கொடுமையால் மாணவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து மீள்வதற்குள், உத்தரகாண்டில் மற்றொரு கொடூர ராகிங் நடந்து உள்ளது.

உத்தரகாண்டின் ரிஷிகேஷ் நகரில் பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி படிப்புக்கான பல்கலை கழகம் ஒன்று உள்ளது. இதில், மாணவர் ஒருவர் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், அவருடன் படிக்கும் சக மாணவர் மற்றும் 2 மூத்த மாணவர்கள் உள்பட 3 பேர் மாணவரை கட்டாயத்தின்பேரில் உடைகளை களைய செய்து, நிர்வாணப்படுத்தியும், மது குடிக்க வைத்தும் ராகிங்கில் ஈடுபட்டு உள்ளனர்.

இதுபற்றி பிரேம் நகர் காவல் நிலைய உயரதிகாரி பிரதீப் பிஷ்த் கூறும்போது, குற்றவாளிகள், நடந்த விவரம் முழுவதனையும் வீடியோவாக எடுத்து வைத்து கொண்டுள்ளனர். அதனை வெளியே விட்டு விடுவோம் என மிரட்டி ரூ.60 ஆயிரம் பணம் தரும்படி கேட்டு அச்சுறுத்தியுள்ளனர் என கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த மாணவரை, அவர்கள் அடித்து, துன்புறுத்தி உள்ளனர்.

இதுபற்றி பாதிக்கப்பட்ட மாணவர் போலீசில் தெரிவித்து, சம்பவம் பற்றிய வீடியோ ஒன்றையும் கொடுத்து உள்ளார். அந்த வீடியோவில் குற்றவாளிகள் தவிர வேறு 2 பேர் உள்ளனர். அவர்களின் அடையாளங்களை கண்டறியும் பணிகள் நடந்து வருகின்றன என அவர் கூறியுள்ளார்.


Next Story