தண்ணீர் பாட்டில் தகராறில் ஓடும் ரெயிலில் இருந்து இளைஞர் தூக்கி வீச்சு


தண்ணீர் பாட்டில் தகராறில் ஓடும் ரெயிலில் இருந்து இளைஞர் தூக்கி வீச்சு
x

கோப்புப்படம்

தண்ணீர் பாட்டில் தகராறில் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு ஓடும் ரெயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.

ஜான்சி,

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள லலித்பூர் மாவட்டத்தில் தண்ணீர் பாட்டில் தகராறில் ரெயில்வே பான்ட்ரி ஊழியர்கள் இளைஞர் ஒருவரை தாக்கி ஓடும் ரெயிலில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரவி (வயது 26) என்பவர் தனது சகோதரியுடன் பயணம் செய்தார். ரெயில் ஜிரோலி கிராமம் அருகே வந்தபோது, ​​தண்ணீர் பாட்டில் வாங்குவது மற்றும் பான் மசாலாவை துப்புவது தொடர்பாக அவருக்கும் பான்ட்ரி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, ரவியின் சகோதரி லலித்பூர் ஸ்டேஷனில் இறங்கியுள்ளார். ஆனால், பான்ட்ரி ஊழியர்கள் ரவியை இறங்க விடாமல் தாக்கியுள்ளனர். மேலும் ஓடும் ரெயிலில் இருந்து தண்டவாளத்தில் தூக்கி வீசியதாகக் கூறப்படுகிறது. உள்ளூர் மக்கள் அவரை அங்கிருந்து மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அவர், சிகிச்சைக்காக ஜான்சி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவி அளித்த புகாரின் அடிப்படையில் பான்ட்ரி ஊழியர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 325 (கடுமையான காயத்தை ஏற்படுத்துதல்) மற்றும் 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ரெயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story