தட்சிண கன்னடா, உடுப்பி, குடகு மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' எச்சரிக்கை
தொடர் கனமழையால் கர்நாடக கடலோர மற்றும் மலைநாடு மாவட்டங்கள் வெள்ளக்காடானது. தட்சிண கன்னடா, உடுப்பி, குடகு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மங்களூரு;
கனமழை
கர்நாடகத்தில் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா மற்றும் மலைநாடு மாவட்டங்களான குடகு, சிக்கமகளூரு, ஹாசன் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக அரபிக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தம் காரணமாக கடலோர மாவட்டங்களில் பேய் மழை பெய்து வருகிறது.
உத்தரகன்னடா மாவட்டம் பட்கல் தாலுகா முட்டள்ளியில் பெய்த கனமழைக்கு அரசு பள்ளியின் சுற்றுசுவர் இடிந்து விழுந்தது. நேற்று விடுமுறை தினம் என்பதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. உடுப்பி மாவட்டம் பைந்தூரில் பெய்த மழையால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல முடியவில்லை.
வெள்ள நீர் சூழ்ந்தது
இதேபோல் புத்தூர், உப்பினங்கடி, உல்லால், மூடுபித்ரி, கடபா, சுப்ரமணியா, சுள்ளியா, பெல்தங்கடி, தர்மஸ்தலா, ஆகிய இடங்களில் தொடர்ந்து மழை ெபய்து வருகிறது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் சாலைகள், பாலங்களுக்கு அடியில் மண் அரிப்பு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்பதால் தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் குடகு மாவட்டத்தில் செம்பு, சோமவார்பேட்டை, பொன்னம்பேட்டை உள்பட பல இடங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதில் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு சாலைகளில் கற்கள், மணல்கள் குவிந்து கிடக்கும் நிலை ஏற்பட்டது.
தடுப்பணையில் உடைப்பு
பாகமண்டலா தலைக்காவிரி பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரங்களில் உள்ள கிராமங்கள் வெள்ள நீரில் தத்தளிக்கவேண்டிய நிலை உருவாகியுள்ளது. அந்த பகுதிகளில் சிக்கியிருக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரிகேவில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் மீட்பு பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. சம்பாஜே, கொய்நாடு பகுதியில் பெய்து வரும் கன மழையால் தடுப்பணை இடிந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதில் பாலங்கள் நீரில் மூழ்கியது. இன்னும் சில நாட்கள் கன மழை நீடிக்கும் என்பதால் குடகு மாவட்டத்திற்கும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஹாசன் மாவட்டத்தில் பெய்த மழையில் வீடுகளில் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. பெலகாவியிலும் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் இல்லை என்பதால் உயிர் சேதம் ஏற்படவில்லை.