வேட்பாளர்கள் ரூ.2 ஆயிரம் மட்டுமே ரொக்கமாக வழங்கலாம் - கிடுக்கிப்பிடி போடுகிறது தேர்தல் கமிஷன்


வேட்பாளர்கள் ரூ.2 ஆயிரம் மட்டுமே ரொக்கமாக வழங்கலாம் - கிடுக்கிப்பிடி போடுகிறது தேர்தல் கமிஷன்
x

கோப்புப்படம்

வேட்பாளர்கள் ரொக்கமாக ரூ.2 ஆயிரம் மட்டுமே வழங்க ஏதுவாக தேர்தல் நடத்தை விதிகளை திருத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது

புதுடெல்லி,

தேர்தல்களை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கு தேர்தல் கமிஷன் விரும்புகிறது. இதற்காக அவ்வப்போது சீர்திருத்தம் என்ற பெயரில் மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் பரிந்துரைகள் செய்கிறது.

அந்த வகையில் தற்போது வேட்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள், நடத்தை விதிகள் என்ற பெயரில் அமலில் இருந்து வருகின்றன. ஒரு வேட்பாளர் ரொக்கமாக ரூ.10 ஆயிரம் வரையில் வழங்கிட நடத்தை விதிகள் அனுமதிக்கின்றன. அதற்கு கூடுதலான தொகையை ஒருவருக்கு அல்லது ஒரு நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமானால் அதற்காக வேட்பாளர் தான் தொடங்கி உள்ள வங்கிக்கணக்கில் இருந்து காசோலை, வரைவோலை, ஆன்லைன் பரிமாற்றம் வழியாகத்தான் செய்ய வேண்டும்.

வேட்பு மனு தாக்கல் செய்த நாளில் இருந்து ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படுகிற நாள் வரையில் தினந்தோறும் செலவு கணக்கு பராமரிக்க வேண்டும். ரொக்க புத்தகம், வங்கி புத்தகம் ஆகியவற்றையும் பராமரித்து வர வேண்டும்.

வேட்பு மனு தாக்கலுக்கான அனைத்து செலவினங்களும் செலவு கணக்கில் கொண்டு வர வேண்டும்.

தேர்தல் முடிவு வெளியான 30 நாளில் செலவு கணக்கு அறிக்கையை வேட்பாளர்கள் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

வேட்பாளர் ரூ.10 ஆயிரத்தை ரொக்கமாக வழங்கலாம் என்ற வரம்பினை ரூ.2 ஆயிரமாக குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.

அந்தப் பரிந்துரையில், தேர்தல் தொடர்பான செலவினங்களுக்காக ஒரு நபர் அல்லது நிறுவனத்துக்கு ரூ. 2 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக செலுத்தப்படும் அனைத்து பணமும் வேட்பாளர்கள் தேர்தலுக்கென்று தனியாக தொடங்கி உள்ள வங்கிக்கணக்கில் இருந்து காசோலைகள் அல்லது ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் முறையில்தான் செலுத்த வேண்டும். இதற்காக நடத்தை விதிகள் திருத்தப்பட வேண்டும் என்று கூறி உள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கையில், "தேர்தல்களில் போட்டியிடுகிற வேட்பாளர்களின் செலவினங்களில் பெருமளவில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகத்தான் இந்தப் பரிந்துரையை தேர்தல் கமிஷன் செய்துள்ளது" என தெரிவித்தன.


Next Story