பெங்களூருவில் ஆழ்துளை கிணறுகள் அமைத்ததில் முறைகேடு


பெங்களூருவில் ஆழ்துளை கிணறுகள் அமைத்ததில் முறைகேடு
x

பெங்களூருவில் ஆழ்துளை கிணறுகள் அமைத்ததில் அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

பெங்களூரு:

பெங்களூருவில் ஆழ்துளை கிணறுகள் அமைத்ததில் அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

ரூ.976 கோடி முறைகேடு

பெங்களூரு மாநகராட்சியில் சுத்தமான குடிநீர் மையங்கள் அமைத்ததில் முறைகேடு நடந்திருப்பதாக பா.ஜனதா பிரமுகர் என்.ஆர்.ரமேஷ், ஊழல் தடுப்பு படையில் புகார் அளித்திருந்தார். அதாவது கடந்த 2016-17-ம் ஆண்டிலும், 2017-18-ம் ஆண்டிலும் 9,588 ஆழ்துளை கிணறுகள் அமைத்ததில் ரூ.976 கோடி முறைகேடு நடந்திருப்பதாக புகார் அளித்திருந்தார். பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதால், இந்த வழக்கு அமலாக்கத்துறைக்கு மாற்றப்பட்டு இருந்தது.

அதன்பேரில், அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். ஏற்கனவே என்.ஆர்.ரமேசிடம் விசாரித்து அதிகாரிகள் தகவல் பெற்றிருப்பதுடன், முறைகேடு சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் பெற்றுள்ளனர். அதே நேரத்தில் கடந்த வாரம் முறைகேடு குறித்து விளக்கம் அளிக்கும்படி மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீசும் அனுப்பி வைத்திருந்தனர்.

150 அடி மட்டுமே...

இந்த முறைகேடு விசாரணையை அமலாக்கத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். பெங்களூரு நகரில் அமைக்கப்பட்டுள்ள சுத்தமான குடிநீர் மையங்களுக்கும், அதன் அருகே போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் குறித்தும் பரிசீலனை நடத்தி தகவல்களை திரட்டினார்கள். அந்த தகவலை பார்த்து அமலாக்கத்துறை அதிகாரிகளே அதிர்ச்சி அடைந்தனர். அதாவது ஆழ்துறை கிணறுகள் 700 அடிக்கு போடப்பட்டு இருந்ததாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் வெறும் 150 அடி மட்டுமே ஆழ்துளை கிணறுகள் இருப்பது தெரிந்தது.

இதன்மூலம் 150 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறு அமைத்துவிட்டு, 700 அடி போட்டு இருப்பதாக கணக்கு காட்டி முறைகேட்டில் ஈடுபட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். ராஜராஜேசுவரிநகர் பகுதிகளில் நடத்தப்பட்ட பரிசீலனையில் இந்த முறைகேடுகள் நடந்திருப்பதை அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து, ராஜராஜேசுவரிநகர் தொகுதியின் முன்னாள் கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Next Story