கல்லூரி பேராசிரியையிடம் ரூ.69 ஆயிரம் மோசடி


கல்லூரி பேராசிரியையிடம் ரூ.69 ஆயிரம் மோசடி
x
தினத்தந்தி 10 March 2023 6:45 AM GMT (Updated: 10 March 2023 6:45 AM GMT)

திருமண இணையதளம் மூலம் பழக்கமான நபர், கல்லூரி பேராசிரியையிடம் ரூ.69 ஆயிரம் மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது.

மைசூரு-

திருமண இணையதளம்

மைசூரு உதயகிரி பகுதியை சேர்ந்தவர் சவுமியா (வயது 33). இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவர், திருமணத்துக்கான தனது விவரங்களை திருமண இணையதளத்தில் பதிவு செய்திருந்தார். அப்போது அந்த திருமண இணையதளம் மூலம் ஒருவரின் பழக்கம் சவுமியாவுக்கு கிடைத்தது. பின்னர் அவர்கள் செல்போன் எண்ணை பரிமாறி கொண்டு பேசி வந்தனர். அப்போது அந்த நபர், வெளிநாட்டில் வேலை பார்ப்பதாக கூறி உள்ளார். மேலும் இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளதாகவும், விரைவில் இந்தியா வர உள்ளதாகவும் சவுமியாவிடம் அந்த நபர் தெரிவித்தார்.

ரூ.69 ஆயிரம் மோசடி

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த நபர், சவுமியாவை தொடர்புகொண்டு தான் இந்தியா வந்திருப்பதாகவும், தன்னிடம் இந்திய பணம் இல்லை என்றும், தனக்கு இந்திய பணத்தை அனுப்பி வைக்கும்படியும், வெளிநாட்டு பணத்தை இந்திய பணமாக மாற்றி அனுப்புவதாகவும் கூறி உள்ளார்.

இதனை நம்பிய சவுமியா, அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.69 ஆயிரத்தை அனுப்பினார். அதன்பிறகு அந்த நபரை, சவுமியாவால் தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் தன்னை அந்த நபர் மோசடி செய்ததை சவுமியா உணர்ந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story