அடிக்கடி வயிற்று வலி, 11 வயது சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அதிர்ச்சி


அடிக்கடி வயிற்று வலி, 11 வயது சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அதிர்ச்சி
x

கர்நாடகாவில் அடிக்கடி வயிற்று வலிக்கு ஆளான, 11 வயது சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.



மைசூரு,


கர்நாடகாவின் மைசூரு நகரில் 11 வயது சிறுமிக்கு அடிக்கடி வயிறு வலிக்கிறது என கூறி வந்துள்ள நிலையில், பெற்றோர் ஒவ்வொரு மருத்துவமனையாக கொண்டு சென்று காண்பித்துள்ளனர்.

ஆனால், பல்வேறு மருத்துவம் பார்த்தும் வலி குறையவில்லை. கடந்த 8 மாதங்களாக பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றுள்ளது. வலிக்கான காரணம் என்னவென கண்டறிய முடியவில்லை. இதனால், பள்ளி படிப்பையும் இடையிலேயே சிறுமி நிறுத்தி விட்டார்.

இதனை தொடர்ந்து, இரைப்பை சிகிச்சை நிபுணரிடம் சென்றபோது, அவர் முழு அளவில் எண்டோஸ்கோபி செய்து பார்த்துள்ளார். அதில், சிறுமி வயிற்றில் பெரிய பந்து வடிவில் முடி இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.

சாப்பிடும் உணவும், முடியும் கலந்து ஒருவித தோற்றத்துடன் காணப்பட்டு உள்ளது. மிக பெரிய அளவில் முடி நீண்டு இருந்துள்ளது. இதனால், எண்டோஸ்கோபி வழியே அதனை வெளியேற்ற முடியவில்லை.

இதன்பின், சிறுமிக்கு லேபரோஸ்கோபி அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இதில், அரை கிலோ (500 கிராம்) எடை கொண்ட முடி நீக்கப்பட்டது. வலி குணமடைந்து, சிறுமி உடல்நலம் தேறி வருகிறார்.

சிறுமியிடம் நடந்த கவுன்சிலிங்கில், மனஅழுத்தம் அதிகரிக்கும்போது, தலைமுடியை பிய்த்து அதனை உண்ணும் வழக்கம் கொண்டிருந்து உள்ளார் என தெரிய வந்துள்ளது. இதனை சிறுமியின் குடும்பத்தினர் கவனித்தபோதும், 2 ஆண்டுகளாக அலட்சியமுடன் இருந்துள்ளனர்.

இதுவே சிறுமியை, மருத்துவ சிக்கலான சூழலில் கொண்டு போய் விட்டு உள்ளது. இதனால், சிறுவர், சிறுமிகள் இடையே அமைதியான உளவியல் சார்ந்த பிரச்சனைகள் காணப்படுவதும், அது வேறு வகையான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதும் தெரிய வந்துள்ளது.


Next Story